பக்தர்களுக்கு யோகி ஆதித்யநாத் விடுத்த முக்கிய வேண்டுகோள்..!
உத்தரபிரதேசத்தில் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் அமாவாசையையொட்டி புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முதலமைச்சர் கட்டுப்பாட்டு அறை, தலைமைச் செயலர் கட்டுப்பாட்டு அறை, டிஜிபி கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நாள் முழுவதும் கும்பமேளா நிகழ்வுகளை கண்காணித்து வருவதாகக் கூறினார்.
செவ்வாய்க்கிழமை இரவு முதல் பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், காவல்துறை, தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகள் உட்பட அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சூழலில், நிலைமை கட்டுக்குள் உள்ளதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
முன்னதாக கும்பமேளாவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் வேதனை அளிப்பதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது மிகவும் கவலையளிப்பதாகவும், காயமடைந்தவர்களுக்காக இறைவனிடம் தாம் வேண்டிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதேபோல எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்த அனைவரும் விரைந்து குணமடைய விரும்புவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உள்ளூர் நிர்வாகம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




