--- --:--:-- --

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

1

சிவகங்கை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வந்த நிலையில், வல்லதிரகோட்டை, ஆலங்குடி, மழையூர், கிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

 

ஆலங்குடி பகுதியில் இடைவிடாமல் மழையால் வாரச்சந்தையில் தண்ணீர் தேங்கியது. ஆயுத பூஜை விற்பனையை நம்பியிருந்த வியாபாரிகள் விற்பனை செய்ய முடியாமல் தவித்தனர்.

 

இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. காளப்பூர், எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, வேங்கைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், திண்டுக்கல்-காரைக்குடி சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், செவிலிமேடு, ஓரிக்கை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக வெளுத்து வாங்கியது. எனினும்,வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon