தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்..!
புதிய முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
இதில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27 ஆம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க அவர், 17 நாட்கள் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்தநிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024 நடைபெற உள்ளது. அப்போது முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற உள்ளது.
அதோடு 28 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.மத்திய அரசின் நிதி வராததால் தமிழ்நாடு தொழில் துறைக்கு பெரிய சவால் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். என்ன இக்கட்டான சூழ்நிலையை மத்திய அரசு திணித்தாலும், அவற்றை தகர்த்தெறிந்து முதலீட்டாளர்களுக்கு அற்புதமான ஒரு சூழ்நிலையை அரசு உருவாக்கித் தரும் என்றும் அமைச்சர் டி.ஆர். பி.ராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.





