தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை அலெர்ட்..!
தமிழகத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததையடுத்து, இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கனமழை கொட்டியதில் நகர்ப்பகுதிகள், ஆலத்தூர், சிறுவாச்சூர், வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, வைகை அணை, குன்னூர், கண்டமனூர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டியில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.இதேபோல மதுரையிலும் கன மழை கொட்டித் தீர்த்தது.
தெற்கு வாசல், சிம்மக்கல், நெல் பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மழையால் கடும் குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு மாவட்டங்களிலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.





