அம்மாவை குத்தி கொலை செய்த சம்பவம்.. கைநீட்டி அழுத குழந்தை..!
பிளக்ஸ் போர்டில் கொலையான தாயின் படத்தை காட்டிய ஒன்றரை வயது குழந்தையின் காட்சி, கண் கலங்க வைத்தது. பரமக்குடியில் பட்டப்பகலில் இளம் பெண் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கீழப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் மேகலா. இவருக்கு வயது 25. இவருக்கு பரமேஸ்வரன் என்பவரோடு திருமணமாகி 7 மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
கணவருடன் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து இருந்த நிலையில் மேகலா மறு திருமணம் செய்து கொண்டார். அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் இந்த நிலையில் நேற்று மாலை பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் அருகே தனது தாய் வேலை பார்க்கும் கடையில் மேகலா நின்று கொண்டிருந்த பொழுது இரண்டாவது கணவர் மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்க கோரி பரமக்குடி அருகே எமனேஸ்வரர் தெருவில் அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது உயிரிழந்த மேகலாவின் தாயின் மடியில் மேகலாவின் இரண்டு குழந்தைகள் அமர்ந்திருந்தனர்.
அப்பொழுது மேகலாவின் ஒன்றரை வயது குழந்தை பிளக்ஸ் போர்டில் இருந்த மேகலாவின் படத்தை பார்த்து கையை நீட்டி தனது பாட்டியிடம் காண்பித்த செயல் அனைவரையும் கண்கலங்க வைத்தது.





