மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக கண்டெடுப்பு..!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மாயமானதாக தகவல் வெளியான நிலையில், அவரத் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவ ஜெயக்குமார். திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்நிலையில் ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜாஃப்ரின் நேற்று மாலை நெல்லை மாவட்டம் உவரி காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என்று புகாரளித்துள்ளார்.
புகாரின்படி, கடந்த 2ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்ற ஜெயக்குமார், அதன்பிறகு வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, ஏப்ரல் 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலரிடம் ஜெயக்குமார் ஒரு புகார் மனு ஒன்றை அளித்திருந்த தகவல் வெளியானது.
அதில், தனது வீட்டு முன்பு சில நபர்கள் சுற்றி வருவதாகவும், திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதற்காக முயற்சியாக இல்லாமல், கொலை மிரட்டல் நோக்கத்துடன் திட்டமிட்டு சுற்றி வருவதாகவும், அச்சுறுத்தலுக்கு காரணமாக இருக்கூடும் என சில நபர்களின் பெயரை பட்டியலிட்டும் ஜெயக்குமார் புகார் அளித்து இருந்தார்.
அதில், தனக்கு பணம் விவகாரங்களினால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளையும் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.இதையடுத்து, ஜெயக்குமாரை காணவில்லை என்று அவரது மகன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பாதி எரிந்த நிலையில் உடல் மீட்டக்கப்பட்ட நிலையில், தற்கொலையா? அல்லது கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரணை முடக்கிவிட்டுள்ளனர்.
இதனிடையே, கட்சியின் மாவட்ட தலைவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நெல்லைக்கு விரைகிறார்.இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை மிரட்டல் புகாரளித்தது, மாயமானது, மர்மமான முறையில் உயிரிழந்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




