--- --:--:-- --

கோவையில் வெல்வது யார்? அண்ணாமலைக்கு அதிர்ஷ்டம் உண்டா? ராஜ்குமாருக்கு ராஜயோகம் கூடுமா?

28

கொங்கு மண்டலத்தின் இதயமாக உள்ளது கோவை மக்களவைத் தொகுதி. தமிழகத்தின் 2ஆவது பெரிய நகரம் கோவை. 1952இல் கோவை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

 

இங்கு குண்டூசி முதல் ராணுவ உபகரணங்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. சென்னைகயை போலவே, மென்பொருள் துறை, கல்வி, மருத்துவத் துறையிலும் கோவை கோலோச்சுகிறது. விவசாயக் கருவிகள் தயாரிப்பு, நூற்பாலைகள், ஜவுளித் தொழிலுக்கான உபகரணங்கள், மோட்டார் பம்புகள் உற்பத்தி, வாகன உதிரிப் பாகங்கள், காற்றாலைக்கான பாகங்கள், தங்க, வைர நகைகள் உற்பத்தி என இங்கு இல்லாத தொழிலே இல்லை எனலாம். கிராமப்பகுதிகளில் விவசாயமும் நடைபெற்று வருகிறது.

 

கோவை மக்களவைத் தொகுதியில், கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

 

2024 இல் கோவைத் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 20,83,034

 

ஆண் வாக்காளர்கள்: 10,30,063
பெண் வாக்காளர்கள்: 10,52,602
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 369

 

கோவை மக்களவைத் தொகுதியில் இதுவரை ஏழு முறை கம்யூனிஸ்டுகள், ஆறு முறை காங்கிரஸ், இரண்டு முறை திமுக, இரண்டு முறை பாஜக வெற்றி பெற்றுள்ளன. 1998 கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு, 1996 மற்றும் 1980இல் மட்டுமே திமுக நேரடியாகப் போட்டியிட்டு வென்றுள்ளது. அதன்பின், 2014-இல் நேரடியாகப் போட்டியிட்ட திமுக மூன்றாவது இடத்தையே பிடித்தது.

 

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர் நடராஜன் 1.7 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் 2ஆவது இடத்தை பிடித்திருந்தார்.

 

இந்த தேர்தலில் இந்திய அளவில் உற்று நோக்கப்படும் தொகுதியாக உள்ளது கோவை. காரணம், பாஜக தலைவர் அண்ணாமலை களமிறங்கி இருப்பதுதான். திமுகவின் கோட்டையாக இருக்கும் கோவையில் அதிமுகவுக்கும் வலுவான வாக்கு வங்கி உள்ளது. அதே நேரத்தில் இங்கு பாஜகவும் வளர்ந்து வருகிறது. இந்த சூழலில் தான் அண்ணாமலை போட்டியிடுகிறார்.

 

பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஐ.ஐ.எம்-இல் படித்தவர். அதிரடியான ஐபிஎஸ் அதிகாரி. அனல் பறக்கும் அரசியல்வாதி என்று அறியப்படுகிறார். பிரதமர் மோடியின் அன்பை பெற்றவர். இவர் தலைவரான பிறகு பாஜக அசுர வேகத்தில் வளர்வதாக பாஜக தலைவர்கள் கருதுகின்றன.

 

அதேபோல், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆமதாபாத் ஐ.ஐ.எம்-இல் படித்தவர். அதிமுக சார்பில் 1991 – 1996ல் சிங்காநல்லூர் தொகுதியின் எம்.எல்.ஏ–வாக இருந்த சிங்கை கோவிந்தராஜின் மகன் இவர். ராமச்சந்திரன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் தீவிர ஆதரவாளர்.

 

கோவையில் இம்முறை, 10 ஆண்டுகளுக்குப் பின் கோவையில் திமுக நேரடியாக களமிறங்கி உள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறி 2020இல் திமுகவில் இணைந்த கணபதி ராஜ்குமார், திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், அதிமுகவில் 2014இல் கோவை மாநகராட்சி மேயராக பதவி வகித்தவர் என்பதால் தொகுதியில் நல்ல அறிமுகம் உள்ளது. கணபதி ராஜ்குமார் பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பியல் (Journalism and Mass communication) துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 3 ஜாம்பவான்களுக்கு மத்தியில், நாம் தமிழர் கட்சி சார்பில் 36 வயதான இளநிலை பட்டதாரி கலாமணி போட்டியிடுகிறார்.

 

 

கோவையில் யாருக்கு வெற்றி என்பதை நாடே எதிர்பார்த்துள்ள நிலையில் கள நிலவரம் அறிய குற்றம் குற்றமே நிருபர் குழு தொகுதிகளை வலம் வந்தது. மக்களின் எண்ண ஓட்டத்தை நேரில் கண்டது. கோவையில் சந்து பொந்துகளில் கூட பாஜக சின்னம், கொடிகளை காண முடிகிறது. அதிமுக, திமுகவுக்கு இணையாக பாஜக வளர்ந்துள்ளது தெரிகிறது.

 

அதற்கேற்ப அண்ணாமலையும், அவருக்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர்களும் களமிறங்கி பிரசாரம் செய்துள்ளனர். மருதமலை முருகன் கோவிலில் பிரசாரத்தைத் துவங்கிய அண்ணாமலை,‘கோவையின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் போதைப் புழக்கத்தைத் தடுக்கவும், தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அலுவலகம் (NCB) அமைக்கப்படும் என அறிவித்தார்.

 

அத்துடன், கோவைக்கு என பிரத்யேக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு 500 நாட்களில் 100 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக, ஆட்டோ தொழிலாளர்கள், விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், பெண்கள் முன்னிலையில் தேர்தல் வாக்குறுதி வெளியிட்டு உறுதி தந்துள்ளார்.

 

இதே பாணியை திமுகவும் பின்பற்றி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. அதில் முக்கியமானது கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்பதுதான்.

 

எனினும், கடந்த முறை திமுக கூட்டணியில் வென்ற கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர் நடராஜன் தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை என்பதை பல இடங்களில் மக்கள் நம்மிடம் கூறியது, திமுகவுக்கு சற்று பின்னடைவான விஷயம். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அண்ணாமலை குறித்து நேரடி விமர்சனங்கள் எதையும் முன்வைப்பதில்லை. மாறாக திமுக நிறைவேற்றிய பெண்களுக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான உதவி, சிறு குறு தொழில்களுக்கான திட்டங்களை முன்வைத்தும், மோடி அரசை விமர்சித்தும் வாக்கு சேகரித்து வருகிறார்.

 

கோவையில் வெற்றி பெற்றால் சிறு குறு தொழில்களின் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசி தீர்வு காண்போம் என அண்ணாமலை, கணபதி ராஜ்குமார் இருவருமே ஒரே குரலில் பிரசாரம் செய்துள்ளனர். அதேபோல், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனும் இவர்கள் இருவருக்கும் கடும் போட்டியை தருகிறார்.

 

சமூக வலைதளங்களில் வலுவாக உள்ள அவர், மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி, கோவை தொழில் துறை சந்திதுள்ள பின்னடைவுக்கு இரு அரசுகளும் காரணம் என்று பரப்புரை மேற்கொண்டுள்ளார். அதே நேரம், பல வார்டுகளில் திமுக- பாஜக இடையே சம பலம் உள்ளதை பார்க்க முடிகிறது.

 

கூட்டிக் கழித்துப் பார்த்தால் கோவையில் நூலிழையில் திமுக வெற்றி பெறும் வாய்ப்புகள் கனிந்துள்ளன. பாஜக தலைவர் அண்ணாமலை மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிடுவார் என்று தெரிகிறது. 3ஆவது இடத்தில் அதிமுக உள்ளது. ஒருவேளை, கடைசிகட்ட பரப்புரை, பிரசாரத்திற்கு பின் மக்களின் மன ஓட்டம் போன்றவை ஒருவேளை தாமரை மலரவும் செய்யலாம் என்பது தெரிகிறது. மொத்தத்தில் கோவைத் தொகுதி முடிவு இழுபறி நிலவும் ஒன்றாகவே உள்ளது.

Right Menu Icon