குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி..!
ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டும் நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றின் திசை வேகத்தை அளவிடுவதற்கு, குலசேகரப்பட்டினத்தில் இருந்து R H 200 சவுண்டிங் என்ற ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இதனையடுத்து, குலசேகரப்பட்டினத்தில் தற்காலிகமாக கான்கிரீட் தளம் மூலம் அமைக்கப்பட்டுள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து, மதியம் 1.30 மணிக்கு, ஆர்.எச்.200 சவுண்டிங் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதில், செயற்கைக்கோள்களுக்கு பதிலாக காற்றின் திசை வேகத்தை அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில், விண்ணில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில், காற்றின் திசை வேகம் எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்ள இது உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், வரும் காலங்களில் குலசேகரன்பட்டினத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் ராக்கெட்களின் வெற்றிக்கு. இந்த தரவுகள் பயனுள்ள வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நிறைவடைந்ததும், செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு முழுமையான ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




