உத்தராகண்டில் அமலாகும் பொது சிவில் சட்டம்… சட்டசபையில் இன்று விவாதம்!
உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்துக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கும் நிலையில் இன்று அம்மாநில சட்டசபையில் அதன் மீது விவாதம் நடைபெறவுள்ளது.
திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்ற பொது சிவில் சட்டம் வழியமைக்கும் என கூறப்படுகிறது. பொது சிவில் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் ஆளும் திமுகவும், எதிர்க்கட்சி அதிமுகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்த சட்டத்தை உத்தராகண்டில் அமல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்தது.
இந்த குழு 740 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவை மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் சமர்ப்பித்தது. இந்த இறுதி வரைவுக்கு உத்தராகண்ட் அமைச்சரவை கடந்த ஞாயிறன்று ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற அம்மாநில சட்டப்பேரவை 4 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெற உள்ளது. 71 உறுப்பினர்கள் கொண்ட உத்தராகண்ட் சட்டப்பேரவையில் ஆளும் பாஜக அரசுக்கு 47 உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.





