--- --:--:-- --

பதில் சொல்வாரா பவுல்ராஜ் ? காவலர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்! அவிநாசி டிஎஸ்பி-ஐ காப்பாற்ற முயற்சி?

14

பெருமாநல்லூர் காவல் நிலைய காவலர் அருள்குமார், சாத்தூர் அருகே வாகனம் ஓட்டிச் சென்றபோது உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காத்திருப்போர் பட்டியலில் உள்ள அவிநாசி டிஎஸ்பி பவுல்ராஜ் தனது சொந்த வேலைக்கு காவலரை அனுப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்டவையே இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும், இந்த விவகாரத்தில் பவுல்ராஜ் வாய் திறக்க மறுக்கிறார். அவரை காப்பாற்ற முயற்சி நடப்பதாகக் கூறப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் அவரை விடுவதாக இல்லை.

 

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் வேலை செய்து வந்த முதல்நிலைக் காவலர் அருள்குமார். வயது, 36. காவலர் என்ற மிடுக்குடன் திறம்பட பணியாற்றி வந்தவர். காவல் நிலையம் வரும் அனைவரிடமும் இயல்பாக பேசி, நன்மதிப்பை பெற்றவர்.

 

கடந்த 5ஆம் தேதி பெருமாநல்லூரில் இருந்து, டிஎன் 66 ஏஎம் 1912 என்ற பயணிகள் ஆட்டோவில், திருநெல்வேலிக்கு மற்றொரு காவலர் வெங்கடாசல மூர்த்தி என்பவருடன் காவலர் அருள்குமார் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். இருவரும், பெருமாநல்லுாரில் இருந்து அதிகாலை, 5:00 மணிக்கு திருநெல்வேலிக்கு கிளம்பினர். மதியம் வாக்கில், விருதுநகர் மாவட்டம், சாத்துார் பைபாசில் சென்றபோது, ரோட்டின் பக்கவாட்டு தடுப்பில் ஆட்டோ மோதியது.

 

உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள், போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், ஆட்டோவை ஓட்டி சென்ற முதுநிலை காவலர் அருள்குமார் உயிரிழந்தார். உடன் சென்ற வெங்கடாசல மூர்த்தி உயிர் தப்பினார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

விபத்தில் காவலர் அருள்குமார் உயிரிழந்தது, பெருமாநல்லூர் மட்டுமின்றி திருப்பூர் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைவரிடமும் நன்கு பழகுபவர் என்று பெயர் எடுத்த அருள் குமாரின் மரணம், பெருமாநல்லூர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இறந்த காவலர் அருள் குமாருக்கு, மனைவியும், 6 மற்றும் 2 வயதில் பெண் குழுந்தைகள் உள்ளனர். இரு குழந்தைகளை தவிக்கவிட்டு போய்விட்டாரே என்று அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இதனிடையே, காவலர் அருள் குமார் மரணத்திற்கு, காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிஎஸ்பி பவுல்ராஜ் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆடர்லி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் கூறி வந்தாலும், காவல்துறை உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழுள்ள காவலர்களை சொந்த வேலைக்கு பயன்படுத்துவது, வீட்டு வேலைகளை வாங்குவது போன்ற அவலங்கள் இன்னமும் தொடர்கின்றன. அதேபோல், டிஎஸ்பி பவுல்ராஜ் தனது சொந்த வேலைக்கு அருள்குமாரை அனுப்பியபோது தான் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

 

அவிநாசி துணைக் காவல் கண்காணிப்பாளராக இருந்து சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பவுல்ராஜ், தனது உறவினருக்காக, திருப்பூரில் ஆட்டோவை வாங்கியதாகவும், அதை தனது உறவினரிடம் ஒப்படைப்பதற்காக நெல்லைக்கு காவலர் அருள் குமார் உள்ளிட்ட இருவரை அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

 

ஆனால், அவிநாசி டி.எஸ்.பி பவுல்ராஜ் தரப்போ, விருதுநகருக்கு ஆட்டோ ஓட்டி சென்ற போது அருள்குமார் ஓய்வில் இருந்தார். வெங்கடாசல மூர்த்தியும் பணிக்கு வராமல் விடுப்பில் இருந்தார். வெங்கடாசலமூர்த்திக்கு சொந்தமான ஆட்டோவை ஒருவருக்கு கொடுப்பதற்காக சென்றபோது விபத்து ஏற்பட்டது. அந்த ஆட்டோ என் உறவினருக்கு சொந்தமானது இல்லை. நான் அவர்களிடம் ஆட்டோ எடுத்து செல்லும்படி கூறவில்லை என சமாளிக்க முற்படுகின்றனர்.

 

பொதுவாகவே டி.எஸ்.பி. பவுல்ராஜ், தனக்கு கீழுள்ள காவலர்களை எடுபிடி வேலை வாங்குவார் என்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வார் என்றெல்லாம் பேச்சு உள்ளது. அதற்கு உதாரணம் தான் தற்போதைய சம்பவம் எனவும் கூறப்படுகிறது.

அருள்குமாரின் மரணம் டிஎஸ்பி பவுல்ராஜின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளதாகவும், விபத்தின் பின்னணி, மரணம் உள்ளிட்டவை குறித்து தீவிரமாக விசாரித்து, அருள்குமாரின் மரணத்திற்கு மறைமுகமாக காரணமான டிஎஸ்பி பவுல்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்; மறைந்த அருள்ராஜ் குடும்பத்தினருக்கு டிஎஸ்பி தனிப்பட்ட முறையில் இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால், திருப்பூர் எஸ்.பி. சாமிநாதனோ, வழக்கம்போல் விசாரணை நடந்து வருகிறது என்று மட்டும் ஊடகங்களுக்கு தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.

 

ஓருவேளை டிஎஸ்பி பவுல்ராஜை காப்பாற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் முற்படுகின்றனரா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சாமானியர் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பு நேரிட்டால் கெடுபிடி காட்டும் காவல்துறை, அதே வேகத்தை காவல்துறை உயர் அதிகாரி செய்திருந்தாலும் காட்ட வேண்டாமா? காவல்துறையினர் இதில் பாரபட்சம் காட்டி, பவுல்ராஜை காப்பாற்ற முற்பட்டால், காக்கிகளுக்கு ஒரு நியாயமா என்ற அதிருப்தி ஏற்படுவதுடன், மக்களும் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்.

 

எனவே, பாரபட்சமின்றி டிஎஸ்பி பவுல்ராஜை விசாரித்து, அவர் தனது சொந்த வேலைக்கு காவலர்களை அனுப்பி இருப்பது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். இந்த விவகாரம், முதலமைச்சரின் கவனம் வரை சென்றுவிட்டால், திருப்பூர் காவல்துறைக்கே கெட்ட பெயர் உண்டாகும் என்பதை உயர் அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்.

விசாரணை தேவை…
மார்க்சிஸ்ட் கோரிக்கை!

திருப்பூரில் உள்ள சில அரசியல்கட்சிகள், இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை. டிஎஸ்பி பவுல்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அருள்குமாரின் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

 

 

இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், ” பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் வேலை செய்து வந்த முதல்நிலைக் காவலர் அருள்குமார் என்பவர் கடந்த 5ஆம் தேதி சாத்தூர் அருகே சாலைத் தடுப்பில் மோதிய விபத்தில் உயிரிழந்து விட்டார்.

 

அவிநாசி துணைக் காவல் கண்காணிப்பாளராக இருந்து சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பவுல்ராஜின் உறவினருக்காக, திருப்பூரில் ஆட்டோவை வாங்கி, அதை அவரிடம் ஒப்படைப்பதற்காக நெல்லைக்குச் செல்லும்படி டி.எஸ்.பி. பவுல்ராஜ் கூறியதால், அருள்குமார் ஆட்டோவை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

காவல் அதிகாரியின் தனிப்பட்ட சொந்த பணிக்காக, காவலரை அனுப்பி இருந்தால் அது தவறானது. காவல் துறையில் ஆர்டர்லி என்ற முறையில் உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட சொந்த பணிகளுக்கு காவலர்களை வேலை வாங்கக் கூடாது என்ற கருத்து வலுவாக பரவி வருகிறது.

 

இந்நிலையில் காவலர் அருள்குமார் உயிரிழப்பு குறித்து பாரபட்சம் இல்லாத முழுமையான விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும். உயர் அதிகாரியின் உத்தரவின்பேரில் அவர் ஆட்டோவை ஓட்டிச் சென்று விபத்தில் உயிரிழந்திருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயிரிழந்த காவலர் அருள்குமாருக்கு மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். எனவே குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கி, அவரது இரு குழந்தைகளின் கல்விக்கும் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்து அதிகார வர்க்க மனோபாவத்துடன் காவல் துறையினரை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட சொந்தப் பணிக்குப் பயன்படுத்துவதை இனி மேல் முழுமையாகத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

 

Right Menu Icon