--- --:--:-- --

கோவையில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை தணிக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயார் – இஸ்லாமிய அமைப்புகள் உறுதி

1

கோவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை தணிக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து இஸ்லாமிய அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர்.

 

தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வெளியான தகவலை அடுத்து கோவை மாநகரம் முழுவதும் காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.கடந்த மூன்று நாட்களாக கோவை மாநகர காவல்துறை மற்றும் கமாண்டோ படை வீரர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்த கோவை மாவட்ட கொள்கை கூட்டமைப்பு மற்றும் சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பினர், தற்போது கோவையில் எடுக்கப்பட்டு வரும் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு தங்கள் அமைப்பின் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட உலமா சபைத் தலைவர் எம்.ஏ அப்துல் ரஹீம் பார்கவி தீவிரவாத அச்சுறுத்தலை போக்கும் வகையில், மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கும் வகையில் கோவை மாநகர காவல்துறையினர் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கூறினார்.

காவல்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இந்நடவடிக்கைக்கு ஒரு போதும் தாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon