திருவெற்றியூரில் உதய் மின் திட்ட பணிகளை கிடப்பில் போட்டதால் மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது.
மேலும் இந்த ஊரில் 800 க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கு திருவாடானையில் இருந்து ஆதியூர் வழியாக 50 ஆண்டுகளுக்கு முன்பாக மின் கம்பங்கள் நடப்பட்டு மின் வினியோகம் நடைபெற்று வருகிறது.
பெரும்பாலும் கண்மாய்கள் வழியாக மின் கம்பங்கள் நடப்பட்டு உள்ளதால், அடிக்கடி மின் பழுது ஏற்படுகிறது. இதை சரி செய்ய மின் ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு மேல் மின்சாரம் தடை ஏற்படுகிறது. இதனால் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து உதய் மின் திட்டத்தில் கீழ் மாற்றுவழி பாதையில் மின்சாரம் கொண்டு வர திட்டமிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 30 மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் ஊன்றினார். பின்னர் அப்படியே பணிகளை கிடப்பில் போட்டு விட்டனர்.
இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் திருவெற்றியூர் கிராம இளைஞர்களும் பொதுமக்களும் மின்வினியோகம் இல்லாத காட்சிப் பொருளாய் நிற்கும் மின் கம்பத்திற்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து திரு வெற்றியூர் கிராம பொதுமக்கள் கூறுகையில் மின்வாரிய அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக செயல்படுகின்றனர். இங்கு பல நாட்கள் மின்தடை ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறோம். இதற்கு முன்பு பல போராட்டங்களையும் நடத்தி விட்டோம் கிடப்பில் போடப்பட்ட பணிகளை துவங்கவில்லை எனில் வருகிற 2-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் கிராம பெண்களை திரட்டி ஒப்பாரி போராட்டம் நடத்தப்படும். அதன்பின், மதுரை மண்டல மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகத்தில் 9 ஆம் தேதி ஒப்பாரி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.