லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் கொலை..!
லிவிங் டூகெதர் வாழ்வில் பிரச்னை ஏற்பட்ட நிலையில் இளம் பெண்ணை கொலை செய்த அவரது முன்னாள் காதலரை பிடிக்க முடியாமல் பெங்களூரு போலீசார் திணறி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
23 வயதாகும் அகான்ஷா என்பவர் பெங்களூருவில் உள்ள கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார். இதேபோன்ற நிறுவனத்தில் பணியாற்றிய 27 வயதாகும் ஆர்பித் என்பவரை கடந்த ஆண்டு அகான்ஷா சந்தித்துள்ளார்.
முதல் நட்பாக ஆரம்பித்த இந்த உறவு பின்னாளில் இருவரும் ஒரே இல்லத்தில் தங்கும் அளவுக்கு லிவிங் டூகெதர் ரிலேஷன்ஷிப்பாக மாறியது. ஆனால் சிறிது காலத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவ்வப்போது வாய்த்தகராறு நடந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அகான்ஷா தங்கியிருந்த வீட்டிற்கு கடந்த 5 ஆம் தேதி சென்ற ஆர்பித் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முடிவில் அகான்ஷாவை கொலை செய்த ஆர்பித் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த அகான்ஷாவின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையின்போது, இந்த சம்பவம் தற்கொலை போன்று தெரிந்தது. அதாவது அகான்ஷாவை கொலை செய்த பின்னர், அதை தற்கொலையாக மாற்ற சீலிங் ஃபேனில் அவரது சடலத்தை ஆர்பித் தொங்கவிட முயற்சித்தார்.
இது தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து தனது செல்போனை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து அவர் தப்பியோடினார். இதுதொடர்பாக தனிப்படை அமைத்துள்ள போலீசார் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக தேடி வருகின்றனர்.
அவர் சொந்த ஊரான டெல்லிக்கு சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் டெல்லிக்கும் விரைந்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் இருந்தும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த அகான்ஷாவின் குடும்பத்தில் அவர்தான் மூத்த பிள்ளை ஆவார். அவருக்கு 2 தங்கைகள் மற்றும் தம்பி ஆகியோர் உள்ளனர். அகான்ஷா மூலமாக மட்டுமே தங்களது பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்து வந்ததாக அவரது தந்தை ஞானேஸ்வர் கூறியுள்ளார். மேலும் ஆர்பித் யார் என்பது தங்களுக்கு தெரியாது என்றும், அகான்ஷாவின் மரணத்திற்கு பின்னரே அவர் குறித்து தெரியவந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




