எம்பி சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பதிவு..!
சென்னை தியாகராய நகரை சேர்ந்த பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், மதுரை பெண்ணாடம் பேரூராட்சியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் வார்டு உறுப்பினர் விஸ்வநாதன் என்பவர் கட்டாயப்படுத்தி மலக்குழியை சுத்தம் செய்ய வைத்ததன் காரணமாக, உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு தூய்மைப் பணியாளர் ஒருவர் இறந்துள்ளதாகவும், இதுதொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து அக்கட்சியினர், மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். அதில், மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியோ, விஸ்வநாத் என்ற என்ற வார்டு உறுப்பினரோ இல்லை எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மீது எஸ்.ஜி.சூர்யா அவதூறு பரப்புவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மதுரை காவல்துறையினர், நள்ளிரவு தியாகராய நகரில் உள்ள வீட்டில் வைத்து எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து, மதுரைக்கு அழைத்துச் சென்றனர். இதையறிந்த பாஜகவினர் சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வெளியே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் பாஜகவினர், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தொடர்ந்து மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எஸ்.ஜி.சூர்யாவின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் இவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது நீதிமன்றம். இதையடுத்து இவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




