--- --:--:-- --

ஆண்டவர் ராமசாமியின் பள்ளிவேன் மோதி பெண் பலி! அதிவேக பள்ளி வாகனங்களால் காவு கொடுக்கப்படும் உயிர்கள்… அனுபவமற்ற டிரைவர்கள், அதிகார மமதையால் அத்துமீறல்!!

ù÷êê£ôùù

திருப்பூரில், அதிவேகமாக சென்ற விகாஸ் வித்யாலயா பள்ளி வேன் மோதி, டூவிலரில் சென்ற பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல கோடி ரூபாய் சொத்துகள் இருந்தும் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தாதது, அனுபவமற்ற டிரைவர்களை பணிக்கு அமர்த்துவதால், அப்பாவி உயிர்கள் பலிகடா ஆக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

திருப்பூரைச் சேர்ந்த, சர்ச்சைக்குரிய தொழிலதிபரான ஆண்டவர் ராமசாமி, பனியன் நிறுவனங்களுடன் கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவரது விகாஸ் வித்யாலயா பள்ளி, கூலிபாளையத்தில் இயங்கி வருகிறது. இவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் சுழன்று கொண்டிருக்கும்.

 

இவரது பள்ளிக்கு அருகே, அரசு பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டது. இது அமைந்தால் பள்ளிக்கு மவுசு குறையும் என்று கருதிய ஆண்டவர் ராமசாமி, மாணவர்களுக்கு பாதிப்பு வரும் என்று கூறி, வேறு இடத்தில் அமைக்கலாம் என்று யோசனை கூறினார். மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தனது சார்பில் வேறு பகுதியில் இடம் தருவதாகக் கூறி, அவர் தரப்பில் அக்ரகாரபுத்தூரில் இடம் தான கிரயம் செய்யப்பட்டது.

அதற்கு பதிலாக, அவரது பள்ளிக்கு எதிரே உள்ள 8.90 ஏக்கர் நிலம் மாற்றாக, அவருக்கு வழங்கப்பட்டது. அதுவும், 30 – 40 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, வெறும் ஒன்றரை கோடிக்கு வாங்கி, பல கோடி ஆதாயம் பார்த்தார். இந்த விவகாரத்தில் உள்ள முரண்பாடுகளை ‘குற்றம் குற்றமே’ வார இதழ் துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்தது.

 

அதன் பின்னர், ஆண்டவர் ராமசாமியின் சாயம் வெளுக்கத் தொடங்கியது. உண்மையை உரக்கச் சொன்னதற்காக, நமது இதழ் மீது கோபமடைந்த அவர், வழக்கு போட்டு மிரட்டப் பார்த்தார். எனினும் `குற்றம் குற்றமே’ இதழ் எதற்கும் அஞ்சாமல் சமூகத்தில் நிலவும் அவலங்களை தொடர்ந்து தோலுரித்துக் காட்டி வருகிறது.

 

இந்த நிலையில்தான் ஆண்டவர் ராமசாமி நடத்தி வரும் பள்ளி, தற்போது மற்றொரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.  திருப்பூர் பாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர், தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு இன்று காலிய இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, விகாஸ் வித்யாலயா பள்ளி வாகனம், அவர் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, ராதா பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்ததை அறிந்ததும் அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து ராதாவின் உடலை மீட்டு, பிரேதப்பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

முன்னதாக, விபத்தில் ராதா உயிரிழந்த தகவல் அறிந்து அங்கு வந்த அவரது உறவினர்கள் கதறியழுதனர். விபத்துக்கு காரணமான பள்ளி வேன் டிரைவர் மீதும், அனுபவமற்றவரை பணிக்கு அமர்த்திய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்து, சடலத்தை எடுக்கக்கூடாது என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

இச்சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்கள் சிலரிடம் `குற்றம் குற்றமே’ தரப்பில் பேசினோம். அவர்கள் நம்மிடம் “ஊருக்குத்தான் ஆண்டவர் ராமசாமி பெரிய தொழிலதிபர். ஆனால், தனது பள்ளிக்கு எவ்வித உள்கட்டமைப்பு வசதிகளை அவர் செய்துதர மனமில்லாதவர். பள்ளியில் பல வசதிகள் இல்லை. படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பள்ளி வாகனங்களை இயக்கவில்லை. மாணவர்களை அழைத்துச் செல்ல ஒரே வாகனம், 2 டிரிப் அடிக்கும் அவலநிலை இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதனால், காலை நேரத்தில் விகாஸ் வித்யாலயா பள்ளி வாகனங்கள் திருப்பூர் நகர ரோடுகளில் மின்னல் வேகத்தில், மக்களை அச்சுறுத்தும் விதத்தில் கண்மூடித்தனமாக பறக்கின்றன. வேனில் பள்ளிக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல் டிரைவர்கள் வாகனங்களை அதிவேகமாக இயக்குகிறார்கள்.

 

ஒருசில டிரைவர்களுக்கு போதிய அனுபவம் இல்லை என்ற பேச்சும் உள்ளது. குறைந்த சம்பளம் கொடுத்து அனுபவமற்ற டிரைவர்களை வேலைக்கு வைப்பதால் பள்ளிக் குழந்தைகள் உயிருக்கு அச்சுறுத்தலாக அது அமைந்துவிடுகிறது.

 

ஆண்டவர் ராமசாமி, சமுதாயத்தில் தன்னை பெரிய தொழிலதிபர் என்று காட்டிக் கொண்டு அந்த போர்வையில், தனது பள்ளியில் நடக்கும் விதிமீறல்களை மறைக்க முற்படுகிறார். இதற்கு சில அதிகாரிகளை கைக்குள் போட்டு செயல்படுகிறார். இதன் விளைவாகவே, இன்று ஒரு அப்பாவி உயிர் பலி கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஆண்டவர் ராமசாமியின் விகாஸ் வித்யாலயா பள்ளியின் வேன் மோதி, ராதா என்ற பெண் பலியாகி இருக்கிறார். டிரைவரின் அஜாக்கிரதை என்று சொல்லி அவரை கைது செய்து வழக்கை முடித்துவிடுவார்கள். ஆனால், இதற்கு உண்மையான காரணம் பள்ளி நிர்வாகம்தான். எனவே, ஆண்டவர் ராமசாமி மீது வழக்கு போட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மற்ற பள்ளி நிர்வாகங்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாக அமையும். தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி தப்ப நினைக்கும் ஆண்டவர் ராமசாமியை, காவல்துறை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்றனர்.

ஏற்கனவே விதிமீறிய ராமசாமி!

ஆண்டவர் ராமசாமியின் பள்ளி வாகனங்கள் வரும் வேகத்தைப் பார்த்தாலே, எமனின் வாகனம் வருவது போல், பலரும் அலறியடித்து ஓடுவதுண்டு. சாலைப் பாதுகாப்பு விதிகளை அவரது பள்ளி வாகனங்கள் மட்டுமில்ல, அவரே மீறிய சம்பவங்கள் உள்ளன. இதற்கு சமீபத்திய உதாரணம், கடந்த மாதம் பாண்டியன் நகரில் நடந்த ஒன்றைச் சொல்லலாம்.

 

சட்டமானது சாமானியனிடம் அபராதம் வசூலிக்கும்… நடவடிக்கை எடுக்கும்; அதுவே வெள்ளையும் சொள்ளையுமான தொழிலதிபர் என்றால் பம்மிக் கொண்டு போய்விடுமா என்றெல்லாம் அப்போது மக்கள் பேசிக் கொண்டார். இந்த சூழலில்தான் தற்போது ஆண்டவர் ராமசாமி மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இம்முறை, அவரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும்; தவறு உறுதி செய்யப்பட்டால் தகுந்த பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

 

பர்மிட் இல்லாத பள்ளி வேன்… குழந்தைகள் உயிரோடு ஆண்டவர் ராமசாமி விளையாட்டு!

திருப்பூரில் விகாஸ் வித்யாலயா பள்ளி   வாகனம் மோதி, ராதா என்ற பெண் இறந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில், விபத்துக்கு காரணமான வாகனம்,  பர்மிட் காலாவதியான நிலையில் இயக்கப்பட்டிருக்கும்  தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம்  ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிரை  பள்ளி வாகனங்கள் பறிக்கப் போகின்றனவோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய விகாஸ் வித்யாலயா பள்ளி  , கல்வி நிறுவனங்களில் உள்ள வாகன ஓட்டுனர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக உள்ளனர் என்பதும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. விபத்து நடந்த பகுதியின் அருகாமையில் பாலம் உள்ளது. ஒருவேளை பாலத்தில் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளாகி இருந்தால், பல குழந்தைகளின் உயிர் கேள்விக்குறியாகி இருக்கும்.

 

இது குறித்து, குற்றம் குற்றமே  சார்பில், இறந்த ராதாவின் உறவினர்கள், நண்பர்களிடம் பேசினோம். அவர்கள் நம்மிடம் ஆண்டவர் ராமசாமி பள்ளி குறித்த அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்தனர். விபத்துக்குள்ளாகி இறந்த ராதாவின் உடலை அப்படியோ போட்டுவிட்டு, ` நாயை அடித்துப் போட்டு போனது போல்’  பள்ளி நிர்வாகம் தரப்பில்  சென்றுவிட்டதாக, உறவினர்கள் ஆதங்கத்தோடு நம்மிடம் பகிர்ந்தனர்.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால், ராதா என்ற பெண்மணி உயிரிழக்க, இன்று அவரது இரண்டு குழந்தைகளும் தாயின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு யார் பதில் சொல்வது என்று கேள்வி எழுப்பும் உறவினர்கள், விபத்து ஏற்படுத்திய பள்ளி வாகனம், அதன் பின்னர் நிற்காமல் சென்றுவிட்டதாக சோகமே உருவாக நம்மிடம் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் விபத்து தொடர்வதாகக் கூறும் பொதுமக்கள், பள்ளி வாகனத்தில் வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட எதுவும் இல்லாததற்கு அதிகாரிகள் அலட்சியமும் காரணம். இந்த வழக்கில் அதிகாரிகளையும் சேர்த்து  அவர்களையும் தண்டிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பெண்ணின் உயிரை காவு கொண்ட பள்ளி வாகனத்தின் பர்மிட், கடந்த 12.03.2023ம் தேதியே காலாவதியான நிலையில், அந்த வாகனம் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்துள்ளது. இதை ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள், ஆண்டவர் ராமசாமி நீட்டும் பணத்துக்கு ஆசைப்பட்டு விதிமீறலை கண்டு கொள்ளாமல் இருப்பதாக, பொதுமக்கள் ஆவேசத்துடன் குற்றம்சாட்டுகின்றனர்.

 

எனவே, இந்த விவகாரத்தில் வாகன ஓட்டுனரை மட்டும் பலிகடா ஆக்காமல், மெத்தனமாக இருந்த பள்ளியின் உரிமையாளர் ஆண்டவர் ராமசாமி, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசுக்கும், இங்குள்ள திமுக அமைச்சர், எம்.எல்.ஏ.க்களின் நற்பெயருக்கும் இந்த சம்பவம் களங்கத்தை ஏற்படுத்திவிடும். எனவே, சட்டம் பாரபட்சம் பார்க்காமல் சாட்டையை சுழற்ற வேண்டும்; யார் செய்தாலும் `குற்றம் குற்றமே` என்று தண்டிக்க வேண்டும். அப்போதுதான், இறந்துபோன ராதாவின் ஆன்மா சாந்தியடையும்.

Right Menu Icon