தமிழகத்தில் இன்று 86 பேருக்கு கொரோனா பாதிப்பு..! 3-ம் கட்டத்தை வைரஸ் பாதிப்பு எட்டியதா..? சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் பரபரப்பு தகவல்!!
தமிழகத்தில் இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று 3-ம் கட்டத்தை எட்டியுள்ளாரா? என்பது குறித்து ஆய்வு முடிவுகள் வந்த பிறகே தெரியும் எனவும் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக கொரோனா நிலவரம் குறித்து, கடந்த சில நாட்களாக தினமும் மாலை 6 மணிக்கு சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தகவல் பரிமாறி வருகிறார். இன்று அவர் கொடுத்த கொரோனா பற்றிய தகவல் வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த
86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். மொத்தம் 90,824 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும்,127 பேர் அரசின் கண்காணிப்பிலும் உள்ளனர். 7 பேர் தனியார் மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரனா பாதிப்பு 485 -ல் இருந்து 571 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 8 பேர் குணமடைந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யும் வசதி உள்ளது எனவும் இதனை மேலும் அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கீழக்கரையைச் சேர்ந்த முதியவர் இறப்பு குறித்தும், கொரோனா சோதனை முடிவு வெளியாகாத நிலையில் சடலத்தை ஒப்படைத்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த பீலா ராஜேஷ், மிகவும் அபாய கட்டத்தில் தான் கீழக்கரை நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு மணி நேரத்திலேயே இறந்து விட்டார்.
இடைப்பட்ட நேரத்தில் ரத்த மாதிரி எடுக்கப்பட்ட நிலையில், உறவினர்களிடம் உரிய அறிவுரைகளை கூறியே சடலத்தை ஒப்படைத்ததாக தெரிவித்தார். இன்று தான் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களிடமும் பரிசோதனை நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் 2-ம் கட்டத்தில் தான் நீடிப்பதாகவும், தற்போது தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் ஆய்வு முடிவுகளுக்குப் பிறகே 3-ம் கட்டத்திற்கு நகர்ந்துள்ளதா? என தெரிய வரும் என்ற பீலா ராஜேஷ், 3-ம் கட்டத்திற்கு சென்று விடக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்றும் இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.






