குர்ஆன் மீது சத்தியம் செய்ய முடியுமா? – சங்கத்தமிழன் கேள்வி
வி.சி.க துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் குறித்து, அக்கட்சியின் நிர்வாகி சங்கத்தமிழன் யூடியூப் நேர்காணல் ஒன்றில் எழுப்பிய மதரீதியான கேள்வி, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் வி.சி.க நிர்வாகி சங்கத்தமிழன் இடையேயான அரசியல் விமர்சனங்கள் மற்றும் ஊடக விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
வி.சி.க-வின் முக்கிய முகமாகவும், மாநில துணைப் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.கடந்த காலத்தில் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.சமீபத்தில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பது மற்றும் பிற அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
வி.சி.க நிர்வாகி சங்கத் தமிழன் ஒரு யூடியூப் சேனைல் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் குறித்து விமர்சனம் செய்யும்போது, குர்-ஆன் மீது சத்தியம் பண்ண முடியுமா? என்று கேள்வி எழுப்பியதால் ஆளூர் ஷாநவாஸுக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளங்களில் சங்கத்தமிழனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வி.சி.க கத்தார் துணை செயலாளர் அதிரை உபயா முகநூலில் பதிவிட்டிருப்பதாவது: “வி.சி.க. சங்கத்தமிழன் அவர்களுக்கு…உங்களுக்கு ஆளூர் ஷாநவாஸ் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்; ஆனால், அதற்கு என்று ஒரு எல்லை இருக்கிறது. இதுநாள் வரையில் ஆளூர் ஷாநவாஸைப் பல வழிகளில் விமர்சித்த நீங்கள், இப்போது அவர் மதம் சார்ந்த நம்பிக்கையில் மூக்கை நுழைத்து, அவருடைய புனித நூலைப் பகடைக்காயாக வைத்து விமர்சித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
அவர் ஒரு முஸ்லிம் என்பதால் குர்ஆனில் சத்தியம் செய்யக் கேட்கும் நீங்கள், ஒருவேளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருப்பவர் கிறிஸ்தவராகவோ அல்லது இந்துவாகவோ இருந்தால், ஒவ்வொரு விஷயத்திற்கும் அவரவர் நம்பிக்கையின் மீது சத்தியம் கேட்பீர்களா? ஒருவேளை அவர் கடவுள் மறுப்பாளராக இருந்தால் என்ன செய்வீர்கள்? எதிராளியைக் கோபப்படுத்துவதற்காக ಅವರ குடும்பத்தை இழுத்துப் பேசுவதைப் போன்றதுதான், ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கையை இழுத்துப் பேசுவதும்.
“நம் கட்சியின் மீது அவதூறு பரப்புபவர்களைக் கருத்தியல் ரீதியாக விவாதிக்க வாருங்கள்” என்று அறைகூவல் விடுக்கும் நாம், நம் சக சிறுத்தையின் மீது கருத்து முரண்பாடு ஏற்பட்டால், கொள்கை ரீதியாகவோ அல்லது கருத்தியல் ரீதியாகவோ கேள்விகளை முன்வைக்காமல், அவருடைய மதத்தைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்?
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்துக் கடைசியில் மனிதனைக் கடிப்பது போல…
“ஆளூர் ஷாநவாஸ் தலித்துகளுக்காகக் குரல் கொடுத்தாரா?”
“சேரிகளுக்குள் அவர் கால் பட்டிருக்குமா?”
“பாய்க்கு தலித்தின் வலி தெரியுமா?”
என்றெல்லாம் இதுவரை சாதி ரீதியாகப் பலர் விமர்சித்ததோடு நிற்காமல், இப்போது மத ரீதியாகவும் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?
கட்சியில் இருப்பவர்கள் அனைவரையும் ‘சிறுத்தைகளாக’ப் பார்க்காமல், சாதி மற்றும் மத ரீதியாக அடையாளப்படுத்த முனைவது மிகவும் கண்டிக்கத்தக்கது. நம் தலைவர், என் அரசியல் ஆசான் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் போற்றிப் பாதுகாத்த சமத்துவக் கொள்கையைப் புறம்தள்ளி, பலதரப்பட்ட மக்களும் பயணிக்கும் இயக்கம் இது என்பதை மறந்து, தொடர்ந்து சாதி மற்றும் மத ரீதியாக விமர்சனம் வைப்பதை உள்ளபடியே சகித்துக்கொள்ள முடியவில்லை.
சங்கத்தமிழன் அவர்களே… “குர்ஆனில் சத்தியம் செய்ய முடியுமா?” என்று நீங்கள் ஆளூர் ஷாநவாஸை மட்டும் கொச்சைப்படுத்தவில்லை; கட்சியில் பயணிக்கும் என் போன்ற இஸ்லாமிய சகோதரர்களையும் கொச்சைப்படுத்துவதாகவே உணர்கிறோம். இது எங்களை பாகுபாட்டோடு அணுகுவது போல் வேதனை அளிக்கிறது. இனிவரும் நாட்களில் இந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்…எதிரிகளையும் ஜனநாயகப்படுத்துவோம்!கொள்கை வெல்ல களமாடுவோம்! அமைப்பாய்த் திரளுவோம், அதிகாரம் பெறுவோம்! ஜெய் பீம்! அல்லாஹு அக்பர்!” என்று அதிரை உபயா தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




