திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு! உடன்பாடு கையெழுத்தானது!!
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 6 இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான நாட்கள் குறைந்து வருவதால், தொகுதிப்பங்கீடு முடித்து வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசர கதியில் அரசியல் கட்சிகள் உள்ளன. தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் பேச்சுவார்த்தையை, திமுக தொடங்கியது.
அவ்வகையில், திமுக-மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதில், திமுக – மதிமுக இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இருவரும் கையெழுத்திட்டனர். மதிமுக 12 தொகுதிகள் கேட்டிருந்த நிலையில் 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றால் 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கப்படும் என்று திமுக தெரிவித்தது.
தொகுதி உடன்பாடுக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 6 இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடும். கருணாநிதியிடம் அளித்த வாக்குறுதியின்படி, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளேன். அனைத்து தகுதிகளையும் கொண்ட முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை பார்க்கிறேன் என்றார்.
திமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள், மதிமுக 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான திமுகவின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இக்கட்சிகளுடனான பிரச்சனை நாளைக்குள் தீர்க்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





