--- --:--:-- --

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்..! தலைமை நீதிபதி அவசர ஆலோசனை!!

wr

உச்சநீதிமன்றத்தில் பணி புரியும் ஆறு நீதிபதிகள் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமை நீதிபதி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

 

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டு அவ்வப்போது பீதியைக் கிளப்பி வருகிறது. எச்1பி1 எனப்படும் வைரஸ் காரணமாக இந்த நோய் பரவுகிறது என கண்டறியப்பட்டு அதற்கு தடுப்பூசிகளும்  போடப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் பீதி சமீபத்தில் கிளம்பி, பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது.

 

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் இந்த பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய தடுப்பு நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவிடம் நீதிபதி சந்திரசூட் இன்று முறையிட்டார். மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தமது இருக்கையில் முகக் கவசம் அணிந்து விசாரணை மேற்கொண்டதும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் துஷ்யந்த் தவேவை வரவழைத்து அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் வழக்கறிஞர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவருக்கும் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகள் போட உடனடி நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon