--- --:--:-- --

திருப்பூர் அவிநாசி அருகே கார் மீது லாரி மோதி விபத்து..! 4 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு!!

IMG-20200319-WA0092

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

 

சேலம் விநாயகா மிஷன் மருத்துவக்கல்லூரியில், பாரா மெடிக்கல் பிரிவில் படிக்கும் ஏழு மாணவர்கள் கல்லூரி விடுமுறை விட்டதையடுத்து ஊட்டியை சுற்றி பார்ப்பதற்காக ஒரு தனியார் டிராவல்ஸ் காரில் ஏறி அதிகாலை 3 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு ஊட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்து கொண்டிருந்த கார் அவினாசி அருகே பழங்கரை நல்லிகவுண்டன் பாளையம் பிரிவு அருகே காலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் வேகமாக பெரும் சத்தத்துடன் மோதியது.

இதில் காரில் வந்த 7 மருத்துவக் கல்லூரி மாணவர்களும் காரை ஓட்டி வந்த டிரைவர் மணிகண்டனும் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்தனர். விபத்தில் கார் உருக்குலைந்து போனது. இதில் சிக்கிய கல்லூரி மாணவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டனர். இதில் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 4 பேரும் கார் டிரைவரும் பலியாரினர். இவர்களில் ராஜேஸ் (வயது 21), எடப்பாடியை சேர்ந்த இளவரசன் ( 21 ), கள்ளக்குறிச்சியை சேர்ந்த வெங்கடாசலம் (22) ஆகியோர் 3-ம் ஆண்டு பயோ மெடிக்கல் படிக்கும் மாணவர்கள். நர்சிங் கல்லூரி மாணவர் வசந்த் ( 21 ) காரை ஓட்டி வந்த டிரைவர் மணிகண்டன் ( 28 ) ஆகியோரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பொன்னகரத்தைச் சேர்ந்த சந்தோஷ் ( 22 ), ஜெயசூர்யா ஆகிய இருவரும் பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், கார்த்திக்,கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மிட்டல் ஆகியோர் வந்து பார்வையிட்டு விசாரித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அவிநாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதமாக செய்தார். இதுகுறித்து அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். சமீபத்தில் தான் பஸ் விபத்தில் 19 பேர்கள் மரணம் அடைந்த நிலையில் இந்த சம்பவம் அவினாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon