பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதேபோல், 17ஆம் தேதி (சனிக்கிழமை) உழவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. பிறகு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என நான்கு நாள் விடுமுறை இருக்கிறது.
பொங்கலை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ. 3000 ரொக்கப் பரிசு வழங்கிவருகிறது.
அதேபோல், வெவ்வேறு மாவட்டங்களில் தங்கி பணிபுரிவோரும், படிப்போரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினருடன் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடிட ஏதுவாக தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளையும், தெற்கு இரயில்வே சிறப்பு இரயிலையும் இயக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு பொங்கல் கொண்டாட்டத்தின்போதும், தமிழ்நாடு அரசு பொங்கலுக்கு முந்தைய தினமான போகி தினத்தன்று அவரவர், தங்களது சொந்த ஊர் செல்ல ஏதுவாக விடுமுறையை அறிவிக்கும். அந்த விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் ஒருநாள் வேலை நாளாக அறிவிக்கப்படும்.
அந்தவகையில் இந்த ஆண்டும் வரும் 14ஆம் தேதி போகி அன்று விடுமுறை விடப்படுமா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், தற்போது முதலமைச்சரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், பொங்கல் பண்டிகைக்கு வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அனைத்து விதமான பள்ளிகளுக்கும் விடுமுறையை பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.





