கோவையின் பல்வேறு பகுதிகளில் மின்வாரிய டிரான்ஸ்பார்மர்களிலிருந்து காப்பர் வயர்கள் திருடிய 5 பேர் கைது.ரூ.7 லட்சம் மதிப்பிலான 950 கிலோ காப்பர் வயர், 60 கிலோ அலுமினியம் வயர் பறிமுதல் !!!
கோவை மாவட்டம் அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம், சூலூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மின்வாரிய டிரான்ஸ்பார்மர்களிலிருந்து காப்பர் வயர்கள் திருடு போவது சம்பந்தமாக கடந்த 4 மாதங்களாக புகார்கள் எழுந்து வந்தன.இதுகுறித்து கடந்த 4 மாதங்களில் 11 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு குறித்து மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் நரேந்திரன் நாயர், கோவை மாவட்ட எஸ்.பி அருளரசு ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் கருமத்தம்பட்டி டிஎஸ்பி சூரியமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் தங்கம், சண்முகம், சுந்தரபாண்டியன்,எஸ்ஐக்கள் பாண்டியராஜன், சிலம்பரசன்,சிவக்குமார், வெங்கடேஷ் தலைமைக் காவலர்கள் விஜயகுமார், மகேஷ்குமார், வேலுச்சாமி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் மின்வாரிய டிரான்ஸ்பார்மர்களில் இருந்து காப்பர் வயர்களை திருடியதாக சண்முகம், சேகர், சின்னத்தம்பி, ரங்கராஜ் (எ) கார்த்தி, மணிகண்டன் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது இந்த 5 பேரும் தான் கடந்த 4 மாதங்களாக காப்பர் வயர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர் என தெரியவந்தது.
பின்னர்,அவர்களை கைது செய்த போலீசார் 11 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரூ.7,10,610 மதிப்பிலான 950 கிலோ காப்பர் வயர், 60 கிலோ அலுமினியம் வயர்களை பறிமுதல் செய்தனர். பின்னர்,அவர்கள் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். 11 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து வழக்கு சொத்துக்களை மீட்ட தனிப்படையினரை கோவை மாவட்ட எஸ்.பி. அருளரசு வெகுவாக பாராட்டினார்.இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






