எல்இடி பல்பை விழுங்கிய 3 வயது சிறுவன்..!
தூத்துக்குடியை சேர்ந்த அருண் கணேஷ் என்பவரின் மகன் இவான், சனிக்கிழமையன்று வழக்கம் போல வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சிறிய ரக எல்.இ.டி.பல்பை விழுங்கியுள்ளார். மூச்சுக் குழாயில் சிக்கிய எல்.இ.டி.பல்பால், மூச்சு விட முடியாமல் துடிதுடித்துப் போன சிறுவனின் நிலையை கண்டு அவரது பெற்றோர் பதறினர்.
இதனையடுத்து தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எக்ஸ்ரே, ஈசிஜி போன்றவற்றின் மூலம் சிறுவன் விழுங்கியது எல்.இ.டி.பல்பு என்பதை உறுதி செய்தனர். அங்கு அவருக்கு மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், பல்பை எடுக்க முடியவில்லை. இதனையடுத்து அரசு மருத்துவமனையை நாடினர்.
பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் பரிந்துரை பேரில், நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி முன்னிலையில், காது மூக்கு தொண்டை நிபுணர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவர் குழுவினர் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். வெற்றிகரமாக எல்.இ.டி.பல்பை அகற்றினர்.
மூச்சு குழாயில் இருந்த எல்.இ.டி.பல்பை அகற்றி நிம்மதி பெருமூச்சுவிடச் செய்த மருத்துவர்களுக்கு இவானின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். உயிரோடு விளையாடி பல்பை அகற்றி, சிறுவனின் வாழ்வில் ஒளியேற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.





