காரில் சென்ற 3 பேர்…100 பேரால் இரவு நேரத்தில் அடித்துக் கொலை!
மகாராஷ்டிராவில் காரில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் நூறு பேர் கொண்ட கும்பலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கண்டி தாலி பகுதியைச் சேர்ந்த 3 பேர் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக கடந்த வியாழக்கிழமை அன்று குஜராத் மாநிலம் சூரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
கார் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் கட்சின்சாலே என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவர்களை கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியது. காரில் இருந்த ஓட்டுனர் உட்பட மூவரையும் வெளியே இழுத்த அந்த கும்பல் அவர்களை கடுமையாக தாக்கியது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அங்கு காவலர்கள் வந்தபோதும் அவர்களையும் பொருட்படுத்தாத கும்பல் கடுமையான தாக்குதலை நடத்தியது.
அதில் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். திருட வந்தவர்கள் என நினைத்து தாக்குதல் நடத்தியதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 9 சிறுவர்கள் உட்பட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 101 பேர் வரை காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் 9 சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிக்னி மகராஜ் என்ற முதியவர், சுசிங்கிரி மகராஜ், டிலேஷ் டில்கெட் ஆகியோர் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.







