பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் நிதியுதவி..!
கேரளாவில் பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் நிதியுதவி அளிப்பதோடு 18 வயது வரை மாதந்தோறும் 2000 ரூபாய் நிதி உதவி அளித்து கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கொரொனா தொற்று இரண்டாவது அலையால் இந்தியாவில் தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் பல குழந்தைகள் தங்களின் பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் வாழும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் பெருந் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணமாக 3 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். மேலும் 18 வயது வரை 2000 ரூபாய் நிதி உதவியும் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.






