சென்னை உட்பட 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் தீவிரப் புயலாக நிலவும் அக்வான், ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே வியாழக்கிழமை கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மிதமான மழையும், தென் தமிழகம் மற்றும் வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கணித்துள்ளது.
இதேபோல், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 70 கிலோ மீட்டர் தூரம் வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே, வங்கக்கடலில் நிலவி வரும் ‘அக்வான்’ புயல் இன்று காலை தீவிர புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாளை மாலை மிகத் தீவிர புயலாக வலுப்பெற்று, நவ.20ம் தேதி நெல்லூர் – விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும் எனவும், அந்நேரத்தில் மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





