--- --:--:-- --

நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் விமர்சனத்திற்கு சு.வெங்கடேசன் பதிலடி!

6

நீதிபதி ஜி.ஆர். சாமிநாதனின் விமர்சனத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில் விரிவான பதிலடி கொடுத்துள்ளார். தன்னை ஆடம்பரமான கம்யூனிஸ்ட் நிர்வாகி என்ற வகையில் விமர்சித்ததற்குப் பதிலளித்துள்ள அவர், ரயில் நிலையத்திற்கு வந்திறங்கிய கார் தொடர்பான விமர்சனம் மலிவான தனிநபர் தாக்குதல் என்றும், அந்தக் கார் தனக்குச் சொந்தமானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு கம்யூனிஸ்ட் என்பதில் அளவிலாத பெருமை கொள்கிறேன். கம்யூனிசம் எனக்குக் கேள்வி கேட்கக் கற்றுத் தந்தது. அந்தக் கேள்வி அதற்குரிய எதிர்வினையை உருவாக்கும்போது கேள்வியின் நியாயம் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்தப் பாடத்தை எந்த அவதூறும் அழித்துவிட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

மேலும், தான் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய கார் தொடர்பாக விமர்சிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், “இத்தகைய விமர்சனங்கள் உண்மைகளைச் சரிபார்க்காமல், மேலோட்டமான அவதானிப்பின் அடிப்படையில் முன்வைக்கப்படும்போது, அவை ஒரு சார்புநிலையை வெளிப்படுத்துவதுடன், தனிநபர் தாக்குதலாகவும் மாறுகின்றன. அது மலிவான தனிநபர் தாக்குதல். அது என் காரும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்தக் கார் ஏதுமில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

 

தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமையின் அடிப்படையிலேயே தான் ரயிலில் பயணம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். முதல் வகுப்பில் பயணிப்பதால் ஒருவரின் கருத்து தவறாகிவிடாது; அதேபோல், படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டியில் பயணிப்பதால் ஒருவர் கூறும் கருத்து சரியாகிவிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற ஒப்பீடுகளை அறிவார்ந்த சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், கம்யூனிஸ்டுகள் அணியும் ஆடை, அவர்கள் பயணிக்கும் கார், ரயிலில் தேர்வு செய்யும் வகுப்பு ஆகியவற்றை வைத்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள சு. வெங்கடேசன், தூய்மை மற்றும் எளிமை என்ற கொள்கையின் அடிப்படையில் இத்தகைய கேள்விகள் முன்வைக்கப்படும்போது அதற்குப் பொறுப்புடன் பதிலளிக்கத் தாங்கள் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்தகைய பெருமைமிக்க கட்சியால்தான் தாங்கள் வளர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

 

அதேநேரத்தில், ஒருவரின் ஆடை மற்றும் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் வைத்து அவரது அரசியல் கொள்கையை மதிப்பிட முடியாது என்றும், “ஆடை பரிசோதகரின் தத்துவம் மற்றும் அரசியல் என்ன என்பது எல்லாவற்றையும் விட முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார். பாவபுண்ணியத்திற்கும் பகுத்தறிவுக்குமான போராட்டத்தில் தாங்கள் நிற்கும் தரப்புக்காக எப்போதும் பெருமையுடன் முன்நிற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

 

இந்தப் போராட்டம் தங்களுடன் தொடங்கியதும் இல்லை, தங்களுடன் முடியப்போவதும் இல்லை எனத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள சு. வெங்கடேசன், அரசியல் கொள்கைகளையும் கருத்துகளையும் விவாதிப்பதற்குப் பதிலாக தனிநபர் வாழ்க்கை முறையை முன்வைத்து விமர்சிப்பது முறையல்ல என்ற கருத்தையும் தனது பதிலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். நீதிபதி ஜி.ஆர். சாமிநாதனின் விமர்சனமும், அதற்கு சு. வெங்கடேசன் அளித்துள்ள விரிவான பதிலும் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon