சிவகாசி: குழந்தை கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய 14 வயது சிறுமி..!
நவீன யுகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் சமூக வலைதளங்கள், சில நேரங்களில் தடம் மாறி வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுக்கும் ஆயுதமாகவும் மாறி விடுகின்றன. கொரோனா காலத்தில் கல்விக்கான கருவியாக சிறார்களின் கைகளை சென்றடைந்த செல்போன்கள், தற்போது வன்முறைக்கு வழிவகுக்கும் பேராபத்தாக மாறியுள்ளன. கல்வி, கலை உள்ளிட்டவற்றை ஊக்குவிப்பதில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகித்தாலும், சில நேரங்களில் வன்முறைகளை தூண்டுவதற்கும் வழிவகுப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு உதாரணமாக, சிவகாசியைச் சேர்ந்த சிறுமி, தான் விரும்பிய செல்போனை வாங்கித் தராத ஆத்திரத்தில், 3 வயது சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. தாயை இழந்த 14 வயது சிறுமி, சித்தியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் நிலையில், செல்போன் வாங்கித் தருமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. அதை குடும்பத்தினர் பொருட்டாக எடுத்துக் கொள்ளாத நிலையில், சித்தியின் 3 வயது பேரனை தனி அறைக்குள் அழைத்துச் சென்று தாழிட்ட சிறுமி கத்தியை கழுத்தில் வைத்து செல்போன் வாங்கித் தருமாறு மிரட்டி உள்ளார்.
குடும்பத்தினர் நீண்ட நேரம் போராடியும் சிறுமி வழிக்கு வராத நிலையில், தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், சிறுமி பிடிவாதத்தை கைவிடாத நிலையில், நள்ளிரவு 2 மணியளவில் ஒவ்வொரு செல்போன் கடையாக தொடர்பு கொண்டு சிறுமி கேட்ட குறிப்பிட்ட மாடல் செல்போனை காவல் துறையினர் வாங்கித் தந்துள்ளனர். கையில் செல்போன் கிடைத்த பின்னரே குழந்தையை சிறுமி விடுவித்த நிலையில், சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
செல்போனில் தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பது குழந்தைகளின் மனநலனில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறும் மன நல மருத்துவர்கள் குழந்தைகள் கேட்பதையெல்லாம் உடனடியாக வாங்கிக் கொடுப்பதும், அவர்கள் அடம்பிடிக்கும்போதெல்லாம் விட்டுக்கொடுப்பதும் சரியான அணுகுமுறை அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




