--- --:--:-- --

வார்டு மறுவரையறை குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

4

தமிழ்நாட்டில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு புதிய உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளைச் சீரமைப்பது மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பது குறித்த உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 

 

மாநிலத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், புதிய தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. திட்டமிட்டபடி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறைவுற்ற பின், வரும் மார்ச் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 

 

இதனிடையே, புதிதாகக் கட்டமைப்பு செய்யப்பட்ட உள்ளாட்சிப் பகுதிகளில் வார்டுகளை மறுவரையறை செய்யும் பணிகளும், இடஒதுக்கீட்டு முறைப்படி வார்டுகளைப் பிரிக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 

 

சென்னையில் அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மாநில தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில், ஆணையர் ஜோதி நிர்மலா தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பொன்னமராவதி நகராட்சி, கந்தர்வகோட்டை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம், கள்ளக்குறிச்சியின் பாதூர் ஊராட்சி, தென்காசியின் மேலவீராணம் மற்றும் துத்திக்குளம் ஆகிய உள்ளாட்சிப் பகுதிகளில் வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

 

இந்த ஆலோசனையில் வார்டு மறுவரையறை ஆணைய உறுப்பினர்களான ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அமுதவல்லி, நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், பேரூராட்சிகளின் இயக்குநர் கே.பி.கார்த்திகேயன் மற்றும் மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். இதில், குறிப்பிடப்பட்ட உள்ளாட்சிப் பகுதிகளுக்கான மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்து, அதுகுறித்த அறிக்கையை அரசுக்கு முறைப்படி சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon