அரசுப் பணம் எப்படி வீணடிக்கப்படுகிறது?
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கடந்த மாதத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் , தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக சுமார் ரூ.1,200 கோடி செலவில் பிரம்மாண்டமான நிர்வாக வளாகம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பட்டினப்பாக்கத்தில் அமைய உள்ள புதிய நிர்வாக வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பில் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக 26 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை தொடர்புடைய நிலங்கள் இந்தத் திட்டத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளன. திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. கட்டிட வடிவமைப்பு, விரிவான திட்ட அறிக்கை, கட்டுமான திட்டமிடல், சுற்றுச்சூழல் அம்சங்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய தலைமைச் செயலகம் எந்த இடத்தில் அமையும் என்பது தொடர்பாக நந்தம்பாக்கம், கிண்டி ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. கடலை ஒட்டிய முக்கியமான பகுதியில் இந்தப் புதிய நிர்வாக வளாகம் அமைய இருப்பதால், இடத் தேர்வு குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. நிர்வாக ரீதியாக இது முக்கியமான திட்டமாக பார்க்கப்பட்டாலும், போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்கள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல், அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இதேபோல் மீனவ அமைப்புகள் சார்பிலும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள, புதிய தலைமைச் செயலகம் கட்டம் திட்டத்தைக் கைவிடுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று திங்கள் கிழமை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, “அரசுப் பணம் எப்படி வீணடிக்கப்படுகிறது? புதிய தலைமைச் செயலகம் கட்டக் கூடாது என உத்தரவிட நீதிமன்றத்துக்கு எந்த சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பதைச் சுaட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுதாரர் எந்தவிதமான ஆய்வு நடத்தாமலும், காரணங்கள் ஏதும் இல்லாமலும், விளம்பரத்திற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டனர். பிறகு மனுதாரரின் விருப்பத்தின் பேரில் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




