--- --:--:-- --

டெட் சிறப்பு தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி!

1

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வின் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதி அளித்துள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் 5 ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ள ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

 

அதன்படி, அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், கடந்த ஜூலை மாதம் சிறப்பு தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாககவும், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாககவும், குறைத்து கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60 சதவீதத்திலிருந்து 50 சதவிதமாக குறைக்கக் கோரி 2010ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பொதுப் பிரிவை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதேபோல, தங்களின் ஒவ்வொரு ஆண்டு அனுபவத்துக்கும் ஒரு கருணை மதிப்பெண் வழங்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பி.நடராஜன், என்.செல்வன் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

 

 

கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் இந்த விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.டி.ஆஷா, அதுவரை சிறப்புத் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.இந்த நிலையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் தடையை நீக்கக் கோரி செப்டம்பர் 8ஆம் தேதி பிரதான வழக்கில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

 

இந்த மனு நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் டி.கௌதமன், கூடுதல் அரசு பிளீடர் பி.மகாலட்சுமி ஆகியோர் ஆஜராகி வழக்கை தாக்கல் செய்த மனுதாரர்கள் இடைக்கால கோரிக்கை ஏதும் வைக்காத நிலையில், ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது; பிரதான வழக்கில் இறுதி விசாரணைக்கு தயாராக இருக்கிறோம்; எனவே தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியும், முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடலாம் எனவும் உத்தரவிட்டார். மேலும், பணி அனுபவத்துக்கான ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ஒரு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி ஆசிரியர்கள் தாக்கல் செய்த பிரதான வழக்கை அக்டோபர் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon