9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 1.5 கிமீ உயரம் வரை வட கடலோர தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வடக்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதன் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழையும், திருச்சி, நாமக்கல், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழையும், வரும் 3ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வரும் 4ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், வரும் 5, 6 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 5ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




