கொரட்டூர் – பட்டரவாக்கம் இடையே ரூ.20 கோடியில் 3 புதிய கால்வாய்கள்..!
சென்னை அம்பத்தூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கொரட்டூர் ஏரிக்கு விரைவாகச் சென்றடையும் வகையில், கொரட்டூர் மற்றும் பட்டரவாக்கம் இடையே ரூ.20 கோடி மதிப்பீட்டில் 3 கால்வாய்கள் அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சியும் தெற்கு ரயில்வேயும் முடிவு செய்துள்ளன.
அம்பத்தூர் சிட்கோ கால்வாய் மற்றும் டிடிபி காலனி கால்வாய் உள்ளிட்ட இந்த 3 கால்வாய்களும், அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் நீர்நிலைகளை இணைக்கும் வடிகால் அமைப்பின் ஒருபகுதியாக விளங்கும் நுண்ணிய கால்வாய்களாகும் (micro canals). அம்பத்தூர் சிட்கோ கால்வாயானது, அம்பத்தூர் ஏரியின் உபரி நீரை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள அம்பத்தூர், சிட்கோ, அம்பத்தூர் எஸ்டேட், பட்டரவாக்கம், மேனாம்பேடு ஆகிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சேகரிக்கப்படும் மழைநீரையும் சுமந்து செல்கிறது.
முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில், இந்த வடிகால் இணைப்பில் அடைப்புகளும், போதிய நீரை எடுத்துச்செல்ல முடியாத அளவுக்கு கொள்ளளவு பற்றாக்குறையும் இருப்பது கண்டறியப்பட்டு இருந்தது. வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தெற்கு ரயில்வேக்குச் சொந்தமான நீர்வழிப்பாதைகளில் அமைந்துள்ள 28 ரயில்வே பாலங்கள் மற்றும் சிறு பாலங்களில் (culverts) உள்ள தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதேபோல், கணேசபுரம் மற்றும் அம்பத்தூர் ரயில்வே லெவல் கிராசிங் எண் 6-ல் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளையும், இரு துறைகளுக்கும் இடையேயான முறையான ஒருங்கிணைப்புடன் துரிதமாக முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. ஆலந்தூரில் உள்ள ரயில்வே நடைமேம்பாலப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. மேலும், ஆலந்தூர் நோபல் தெருவில், ரயில்வே பகுதிக்குள் கூடுதலாக அமைக்கப்படவுள்ள கால்வாய்க்கான ‘ப்ரீ-காஸ்ட் ஸ்லாப்’ (Pre-cast slab) பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. இதற்கான ‘புஷ்-த்ரூ’ (Push-through) பணிகள், ரயில்வே தலைமையகத்திடம் இருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாகத் தொடங்கப்படும்.
இந்தப் பணிகளைத் தடையின்றி விரைவாக மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக, செப்டம்பர் 2 அன்று கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி இணை ஆணையர் (பணிகள்) சி.சரவணன் மற்றும் இரு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





