அரசு வேலை தகுதி குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு
அரசு வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைத் தகுதிகள் மற்றும் பணி அனுபவத்தை ஈடுகட்ட உயர்கல்வி தகுதியால் (Higher Degree) முடியாது என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இமாச்சலப் பிரதேச பள்ளிக்கல்வி வாரியத்தில் கணினி வன்பொருள் பொறியாளர் (Computer Hardware Engineer) பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றது. இதற்கு விண்ணப்பித்த ஒரு பெண் வேட்பாளர், விதிகளில் கோரப்பட்டிருந்த 5 ஆண்டு கால பணி அனுபவத்தைப் பெற்றிருக்கவில்லை.
இருப்பினும், அவரிடம் ‘எம்.டெக்’ போன்ற உயர்கல்வி தகுதி இருந்ததைக் கருத்தில் கொண்டு, அவருக்கு அந்த வேலை வழங்கப்பட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் ஏ.எஸ். சந்தூர்க்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது; ’ஆட்சேர்ப்பு விதிகளில் ஒரு குறிப்பிட்ட கால பணி அனுபவம் கோரப்பட்டிருந்தால், அதை உயர்கல்வி தகுதியைக் காட்டித் தவிர்க்க முடியாது. அடிப்படைத் தகுதியை (Basic Eligibility) பூர்த்தி செய்யாத ஒருவரை, அவர் அதிக மதிப்பெண் எடுத்தார் என்பதற்காகவோ அல்லது உயர்கல்வி பயின்றவர் என்பதற்காகவோ தகுதியானவராகக் கருத முடியாது.
உயர்கல்வி என்பது ஒரு வேலைக்கு ‘முன்னுரிமை’ (Preferential) அளிக்க மட்டுமே பயன்படுமே தவிர, அதுவே ‘அடிப்படைத் தகுதியாக’ மாறாது.
அரசுப் பணிகளில் தகுதிகள் குறித்து விதிகள் தெளிவாக இருக்கும்போது, அதில் நீதிமன்றங்கள் தன்னிச்சையாக எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. இந்த வழக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளருக்கு ஒரு வருடம் மட்டுமே அனுபவம் உள்ளது. ஆனால் விதிகளோ 5 ஆண்டுகள் அனுபவம் கோருகிறது. எனவே இந்த நியமனம் சட்டப்படி செல்லாது” என்று தீர்ப்பளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தத் தீர்ப்பு இனிவரும் காலங்களில் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு ஒரு தெளிவை வழங்கியுள்ளது. ஒரு பதவிக்கு விண்ணப்பிக்கும்போது, கல்வித் தகுதியோடு சேர்த்து அவர்கள் கோரும் பணி அனுபவமும் மிக அவசியம் என்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது.
சட்டத்திற்குப் புறம்பாகவோ அல்லது விதிகளைத் தளர்த்தியோ செய்யப்படும் நியமனங்கள் ‘சட்டவிரோதமானவை’ என்றும், அவற்றை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




