--- --:--:-- --

தூக்கி வீசப்பட்ட சூட்கேஸ் – சிதறிய ரூ.46 லட்சம் பறிமுதல்

6

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சுந்தரராஜன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

ஒட்டப்பிடாரம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அ.ம.மு.க) சார்பில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அதிகாரிகள் வேட்பாளர் சுந்தரராஜனின் வீட்டின் அருகே விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சோதனையிட வந்ததைக் கண்டவுடன், வேட்பாளர் வீட்டின் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சூட்கேஸுடன் நின்று கொண்டிருந்த நபர், அதனைத் தூக்கி எறிந்துவிட்டுத் தப்பியோட முயன்றார்.

 

அப்போது சூட்கேஸ் திறந்து, அதிலிருந்த 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாகச் சிதறின. அதனை மீட்ட அதிகாரிகள், அந்த சூட்கேஸிலிருந்து மட்டும் 14 லட்சம் ரூபாய் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர் முதற்கட்டமாக 14 லட்சம் ரூபாய் பிடிபட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து வேட்பாளர் சுந்தரராஜனின் வீட்டின் உள்ளே வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனையைத் தொடங்கினர். இதுவரை நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், தேர்தல் விதிமுறைகளை மீறி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 46.88 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தப் பணப் பறிமுதல் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் வேட்பாளர் வீட்டின் அருகிலேயே கட்டுக்கட்டாகப் பணம் சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon