குரூப் 2 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!
தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 82 குரூப் 2 பணிகளுக்கும், வணிகவரி உதவியாளர் உள்ளிட்ட ஆயிரத்து 309 குரூப் 2ஏ பணிகளுக்கும் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் எழுதிய முதல்நிலைத் தேர்வில் இருந்து 10 ஆயிரத்து 583 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மை தேர்வு நேற்று (8ஆம் தேதி) காலையிலும், குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான தமிழ் தகுதித்தேர்வு நேற்று மாலையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்ற பலரின் பதிவு எண், அந்த மையத்தில் இல்லாததால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து தேர்வர்கள் மறியலில் ஈடுபட்டனர். அதேநேரம், மாநிலக் கல்லூரியில் 821 பேரின் பதிவு எண்கள் இருந்த நிலையில், 10-க்கும் குறைவான தேர்வர்களே வந்திருந்தனர். இதையடுத்து, காலையில் நடைபெற்ற குரூப்-2 முதன்மைத் தேர்வு மட்டுமின்றி, நேற்று மாலை நடைபெற இருந்த தமிழ் தகுதித் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
இதனையடுத்து, தேர்வு மைய குளறுபடி காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் மாற்றப்பட்டு, புதிய அலுவலராக வெங்கடபிரியாவை தமிழ்நாடு அரசு நியமித்தது. இந்நிலையில், நேற்று ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோல், வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ள குரூப்-2 பொது அறிவுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மட்டுமே மார்ச் 15ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




