கார் கண்ணாடிகளை கத்தி வைத்து உடைத்த ரஷ்ய சுற்றுலாப் பயணி கைது..!

துரை அண்ணா பேருந்து நிலையம் அருகே வெளிநாட்டு நபர் ஒருவர் அரைகுறை ஆடையுடன், கையில் கத்தி மற்றும் கற்களுடன் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்துள்ளார். அவர் திடீரென சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது கற்களை வீசித் தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்தன. ​

 

இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவரைத் தடுக்க முயன்றனர். ஆனால், அந்த நபர் தான் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டியதால் பொதுமக்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

சம்பவம் குறித்து அறிந்த அண்ணாநகர் போலீசார் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்தனர். போலீசாரை கண்டதும் அந்த நபர் அவர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டினார். பின்னர், போலீசார் அவரை லாவகமாகச் சுற்றி வளைத்துப் பிடித்து, அவரிடமிருந்த கத்தியைப் பறிமுதல் செய்தனர்.

 

பிடிபட்ட நபரின் பையை சோதனையிட்டதில், அவரது பாஸ்போர்ட் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் (51) என்பதும், சுற்றுலா விசாவில் மதுரைக்கு வந்திருப்பதும் தெரியவந்தது. ​தற்போது ரிச்சர்ட் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அவர் மது போதையில் இச்செயலைச் செய்தாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்தில் அண்ணாநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு தமிழ் அல்லது ஆங்கிலம் சரியாகத் தெரியாததால், மொழிப் பிரச்சினை காரணமாக விசாரணை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.