--- --:--:-- --

வசமாக சிக்கிய விஜய்? * கரூர் விவகாரத்தில் சிபிஐ கடும் நெருக்கடி..* தேர்தலை சந்திக்க தயங்கும் தவெகவினர்?

fhdfh

ரூர் விவகாரத்தில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டதால், அவர் ஆடிப்போயுள்ளார். குற்றப்பத்திரிகையில் அவர் பெயரை சேர்த்து, அவரது தேர்தல் பணியை பாஜக முடக்க திட்டமிட்டுள்ளதாக தவெகவினர் புலம்புகின்றனர். விஜய்யை மட்டுமே நம்பியுள்ள தவெக, வரும் தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. தவெகவினரும் உற்சாகமிழந்து காணப்படுகின்றனர்.

 

கோலிவுட்டின் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வந்த தளபதி விஜய், இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தின் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவரது ரசிகர்கள் பலரும் மனம் நொந்து புலம்புகின்றனர். ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சித் தொடங்கி, கோட்டையைப் பிடிக்கத் துடித்த விஜய்க்கு, கரூர் விவகாரம் இப்போது கழுத்தைச் சுற்றும் கயிறாக மாறியிருக்கிறது. “விஜய் வசமாகச் சிக்கிக் கொண்டார்” என்று ஒருபுறம் ஆளுங்கட்சி தரப்பு சொல்ல, “விஜய்யை மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறது பாஜக” என மறுபுறம் திமுக தரப்பு குற்றம்சாட்டுகிறது.

 

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரப் பொதுக்கூட்டம், ஒரு அரசியல் மாற்றத்துக்கான தொடக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்று நடந்த கூட்ட நெரிசலில் 41 உயிர்கள் காற்றில் கரைந்து போனது, ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியது. “அந்த விவகாரம் ஒருவழியாக முடிந்துவிட்டது” என்று விஜய் தரப்பு நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், உச்ச நீதிமன்றத்தின் சாட்டை அடியால் வழக்கு சிபிஐ-க்கு கைமாறியது. அங்கிருந்துதான் விஜய்யின் உண்மையான ‘க்ளைமாக்ஸ்’ காட்சிகள் ஆரம்பமாகின.

 

ஜனவரி 12-ம் தேதி நடந்த முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு, ஜனவரி 19 அன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் ஆஜரானார் விஜய். காலை 11 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடந்த அந்த ஐந்து மணி நேர ‘கிடுக்கிப்பிடி’ விசாரணையில், அதிகாரிகள் கேட்ட கேள்விகள் விஜய்யை நிலை குலையச் செய்ததாக டெல்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

“மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு?” என்ற ஒற்றைக் கேள்வியை மையமாக வைத்து, சிபிஐ அதிகாரிகள் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர். குறிப்பாக, ஏழு மணி நேரம் தாமதமாகப் பிரச்சார வாகனத்தில் வந்தது ஏன்? கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடுகிறது என்ற தகவல் உளவுத்துறை மூலமாகத் தெரிந்தும், பிரச்சார வாகனத்தை முன்னேற்றிச் சென்றது ஏன்? என வரிசையாகக் கேட்ட கேள்விகளுக்கு விஜய்யிடம் தெளிவான பதில்கள் இல்லையாம். பல கேள்விகளுக்கு “கால அவகாசம் தேவை” என்று கேட்டுவிட்டு விஜய் வெளியே வந்திருப்பது, தவெக கூடாரத்தையே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இன்னொரு பக்கம், விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பது வேறு, விஜய்க்கு பெரும் குடைச்சலாக உள்ளது. இது, பாஜகவின் திட்டமிட்ட அழுத்தம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஓசூரில் பேசும்போது, “கூட்டணிக்காக விஜய்யை பாஜக மிரட்டுவது வெளிப்படையாகத் தெரிகிறது” என்று போட்டு உடைத்தார். அதாவது, ‘கூட்டணிக்கு வா, அல்லது வழக்கைச் சந்திக்கத் தயாராகு’ என்பதுதான் கமலாயம் போடும் ஸ்கெட்ச் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் போன்றவர்கள், “விஜய் விட்னஸ் சம்மன் அடிப்படையில் தான் ஆஜரானார், அவர் முழு ஒத்துழைப்பு தருகிறார்” என்று சமாளித்தாலும், கட்சியினரின் உற்சாகம் வடிந்து போயிருக்கிறது. விஜய்யை மட்டுமே ஒரு ‘மேஜிக் மேன்’ போல நம்பி வந்த தொண்டர்கள், இப்போது அவர் சிபிஐ விசாரணைக்கே நேரம் ஒதுக்குவதால், தேர்தல் பணிகள் என்னாகும் என்று மலைத்துப் போயுள்ளனர்.

விமர்சகர்களோ இன்னும் காரமாகப் பேசுகிறார்கள். “விஜய்யின் அரசியல் நடவடிக்கை என்பது ‘Work From Home’ மாடல் போலவே இருக்கிறது. அவ்வப்போது அறிக்கை விடுவதோடு முடிந்துவிடுகிறது. களத்தில் இறங்கி மக்களைச் சந்திப்பதில் அவருக்குப் பெரும் சுணக்கம் இருக்கிறது” என்கிறார்கள். இப்போது சிபிஐ அழுத்தம் காரணமாக, விஜய் இன்னும் ஒதுங்கிப் போக வாய்ப்புள்ளதாகவும், ஒருவேளை தேர்தல் களத்திலிருந்தே அவர் பின்வாங்கக் கூடும் என்றும் ஒரு கவலை தவெக-வின் சில தலைவர்களிடையே நிலவுகிறது.

 

விஜய் இப்போது ஒரு நெருப்பு ஆற்றைக் கடக்க வேண்டிய சூழலில் இருக்கிறார். கையில் இருக்கும் மூன்று மாதங்களில், அவர் தன் மீதான விமர்சனங்களைத் தவிடு பொடியாக்கி, தமிழகம் முழுவதும் புயலெனச் சுழன்று பிரச்சாரம் செய்ய வேண்டும். இல்லையெனில், “அனுபவமின்மை மற்றும் நெருக்கடிகளுக்கு அஞ்சி ஒதுங்கிவிட்டார்” என்ற முத்திரை அவர் மீது விழுந்துவிடும்.

 

கரூர் வழக்கு என்னும் சுருக்குக் கயிறு விஜய்யின் அரசியல் வாழ்வை முறிக்குமா? அல்லது டெல்லி தர்பார் போடும் சவால்களை முறியடித்து அவர் வெற்றிக் கொடி நாட்டுவாரா? திரைக்கதையை விட விறுவிறுப்பாக நகர்கிறது விஜய்யின் அரசியல் ஆட்டம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon