--- --:--:-- --

குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்வி வழக்கு – நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்

2

மாநில அரசு அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலவரம்பு நிர்ணயித்ததை எதிர்த்து குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்வி குறித்தான வழக்கில் நாளை (20ஆம் தேதி) உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

 

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளதாக கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என காலவரம்பை நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, மசோதா விவகாரத்தில் ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என 14 கேள்விகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.

 

இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் கடந்த செப்டம்பர் மாதம் தொடர்ந்து 10 நாள் விசாரிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஹரீஷ் உள்ளிட்டோரும், மத்திய அரசு வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தின் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நாளை(20ஆம் தேதி) காலை 10.30 மணிக்கு அளிக்க இருக்கிறது. வரும் 23ஆம் தேதியோடு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் பதவி காலம் முடிந்து அவர் ஓய்வு பெற இருக்கிறார். அதற்கு முன்னதாக 20ஆம் தேதி மாநில அதிகாரம் தொடர்பான வழக்கில் அவர் அளிக்கப்போகும் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக வழக்கு விசாரணையின் போது மாநில அரசு வழக்கறிஞர்கள், அரசியலமைப்பு சட்ட விதிமுறைகள் படி, இந்த மனுவை திருப்பி அனுப்புவதை தவிர வேறு வழி கிடையாது என்றும் அனைத்து 14 கேள்விகளுக்கும் தற்போதைய தீர்ப்பிலும், முந்தைய தீர்ப்புகளிலும் தெளிவாக பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

அதேபோல், மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் குடியரசுத் தலைவரின் விருப்புரிமை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள், மசோதா விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரம் குறித்து முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து விளக்கம் வேண்டுமானால் தரலாம். ஆனால், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்ற முடியாது என தெரிவித்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon