ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு!
தமிழ்நாட்டில் கிட்னி பறிப்பு தொடர்பான புகார்களை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நியமித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் வாடும் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி கிட்னியை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையிலான குழு கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை சமர்பித்தது. அதன்படி திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்படும் என கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில், சிறுநீரக பறிப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வில் மனு விசாரணைக்கு வந்த நிலையில், இதே விவகாரத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட கோரிய மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கிட்னி பறிப்பு விவகாரத்தில் இதுவரை குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படாதது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு, பொது மக்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படும் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் முறையிடப்பட்டது.
வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், மாநில பட்டியலில் பொது சுகாதாரம் உள்ள நிலையில், மாநில அரசு அமைதியான பார்வையாளராக இருப்பது ஏற்புடையது அல்ல என்றனர். மேலும் வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதால் சிறப்பு குழுவை அமைக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினர்.
அதன்படி, தமிழ்நாட்டில் சிறுநீரகம் உள்ளிட்ட மனித உறுப்புகள் பறிப்பு, தொடர்பான புகார்களை வழக்குpபதிவு செய்து விசாரிக்க தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் நீலகிரி, நெல்லை, கோவை, மதுரை மாவட்ட எஸ்.பிக்கள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டனர். சிறப்பு விசாரணை குழுவின் விசாரணையை, உயர் நீதிமன்றம் மதுரை கிளை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் கிட்னி தானம் தொடர்பான தொழில்நுட்ப மருத்துவ தகவல்களை மருத்துவத்துறை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, தமிழ்நாடு அரசின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமம் ரத்து அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உரிமம் தற்காலிகமாக ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு அரசின் பரிசீலனையில் உள்ள நிலையில், தங்கள் தரப்பில் விளக்கம் அளிக்க எந்த அவகாசமும் வழங்காமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் முறையிடப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பதிவை ரத்து செய்தது தொடர்பான உத்தரவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




