--- --:--:-- --

திருவள்ளூரில் சிறுமி வன்கொடுமை – குற்றவாளியின் தெளிவான புகைப்படங்கள் வெளியீடு!

1

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில், குற்றவாளியின் தெளிவான புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அருகே கடந்த சனிக்கிழமை, பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று கடத்தினார்.

 

பின்னர் மாந்தோப்பில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடினார். இது தொடர்பான புகாரில் போக்சோ வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், சிறுமி கடத்தப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை வைத்து 7 ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

 

அதன் அடிப்படையில், ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை, தடா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குற்றவாளியை வலைவீசித் தேடி வருகின்றனர்.
குற்றவாளியின் தெளிவான புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆரம்பாக்கம் காவல்நிலையம் முன்பு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிமுக மகளிர் அணியினர், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இதயவியல் மற்றும் நரம்பியல் துறை சார்ந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கவும் மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

 

இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க கோரி அதிமுக சார்பில் தேசிய மகளிர் நல ஆணையத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-25 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமித்து விசாரணை நடத்தவும் அதிமுக சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon