--- --:--:-- --

கூட்டணி ஆட்சிதான் என அமித் ஷா மூன்று முறை சொல்லிவிட்டார் – அண்ணாமலை

2

த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று முறை உறுதியாக கூட்டணி ஆட்சிதான் என சொல்லியுள்ளார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மக்களை நேரில் சென்று சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

 

கூட்டணியைப் பொறுத்தவரை, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அப்படியே இந்த சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்வதாக இருக்கிறது. மறுபக்கம், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பாஜகவுடனான கூட்டணியை முறித்த அதிமுக மீண்டும் அக்கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு, முடிவானது. இந்த முடிவை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது, எடப்பாடி பழனிசாமி இருந்தாலும், அமித் ஷாவே முடிவை அறிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் எனவும் தெரிவித்தார். அப்போதிலிருந்து தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா எனும் பேச்சுகள் எழ ஆரம்பித்தன.

 

இதற்கு அதிமுகவினர் மறுப்பு தெரிவித்து அதிமுக தலைமையிலேயே ஆட்சி என தொடர்ந்து விளக்கம் அளித்துவருகின்றனர். இது தொடர்பாக ஜூன் 29ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “2026 தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்கும்” எனத் தெரிவித்தார்.

 

அதேபோல், ஜூலை 5ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கெனவே அமித் ஷா தன்னை அறிவித்து விட்டதாக விளக்கம் அளித்தார். அதிமுக சார்பில், மக்களை மீட்போம்; தமிழகத்தை காப்போம் சுற்றுப்பயண அறிவிப்பு நிகழ்ச்சியின்போது இதனை அவர் தெரிவித்தார். இருந்தபோது மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் என சொல்லியிருந்தார்.

 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கூட்டணி உருவாக்கத்திலோ, பேச்சு வார்த்தையிலோ எனது பங்கு எதுவும் இல்லை. எனவே எனது தலைவர் அமித் ஷா சொல்வதைத் தான் நான் கேட்டாக வேண்டும். அவர், மூன்று முறை உறுதியாக கூட்டணி ஆட்சிதான் என சொல்லியுள்ளார்.

 

 

அதன் பிறகு ஒரு தொண்டனாக நான், கூட்டணி ஆட்சி இல்லை என மாற்று கருத்தை சொன்னால், நான் அந்தக் கட்சியில் இருப்பதற்கே தகுதியில்லை. அமித் ஷா கருத்தில் மாற்றுக் கருத்து இருக்கிறது என்றால் அதிமுக, அமித் ஷாவிடம் பேசி முடிவெடுக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon