நாளை திருச்செந்தூர் குடமுழுக்கு.. முன்னேற்பாடுகள் தீவிரம்!
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா கோலாகமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. 300 கோடி ரூபாய் செலவில் கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து, நாளை காலை 7 மணி அளவில் குடமுழுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் தொடங்கிய நிலையில், கடந்த 1-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.
12-ஆவது மற்றும் இறுதி கட்ட யாகசாலை பூஜை நாளை அதிகாலை 2 மணிக்கு விநாயகர் வழிபாடுடன் தொடங்கவுள்ளது. அப்போது, 76 குண்டங்களில் வேள்விகள் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 5:30 மணிக்கு யாகசாலை பூஜைகள் நிறைவடையும் என தெரிவிக்கப்படுள்ளது.
யாகசாலையில் மூலவர் சுப்பிரமணியர், உற்சவர் சண்முகர் மற்றும் நடராஜர் ஆகியோருக்கு தங்க குடங்களில் புனிதநீர் வைக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த பின்னர் புனித நீர் குடங்களுடன் சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் கோபுரத்தை அடைவார்கள் எனவும், பிரதான ராஜகோபுரத்தில் ஒன்பது தங்க கலசங்கள் இருப்பதால், ஒவ்வொரு கலசத்திற்கும் தலா இருவர் வீதம் புனிதநீர் ஊற்றுவதற்காக 18 சிவாச்சாரியார்கள் செல்வார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தவிர கிழக்கு மற்றும் தெற்கு கோபுரம், பரிவார மூர்த்திகள் அமைந்துள்ள கோவில்களின் கோபுரங்களில் உள்ள கலசங்கலிலும் சிவாச்சாரியார்கள் புனிதநீர் உற்றவுள்ளனர். மேலும், 20 டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் தமிழில் மந்திரங்களை படிக்க, நாதஸ்வர இசை, மேள தாளத்துடன் நாளை காலை 6:15 மணியில் இருந்து 6:50 மணிக்குள் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளது.
கோயிலில் உள்ள பெருமாள் சன்னதியின் மேல் உள்ள கோபுரத்தில் பட்டாச்சாரியார்கள் குடமுழுக்கு பணிகளை மேற்கொள்வார்கள் எனவும், கோயிலில் உள்ள அனைத்து கோபுரங்களின் கலசங்களிலும் ஒரே நேரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறவுள்ளது. குடமுழுக்கு விழாவைக் காண பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கோயிலின் மேல் பகுதியில் 800 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபுரங்களை தரிசிக்கக்கூடிய இடங்களான கடற்கரை, தற்காலிக மரப்பாலம், கோயிலின் முன்பகுதி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்கள் கூடுவதற்காகவும், அங்கு, குழாய் மூலமாகவும், 20 டிரோன்கள் மூலமாகவும் புனிதநீர் தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 7 லட்சம் ரூபாய் செலவில், 200 அடி நீளம், 10 அடி அகலத்தில் இரும்பு கர்டர்கள் பொருத்தி அதன்மீது மரங்களை கொண்டு அழகாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரைவிரிப்பு பொருத்தி இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.
குடமுழுக்கையொட்டி, இன்று நண்பகல் 12 மணியுடன் பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தப்படவுள்ளது. குடமுழுக்கு முடிந்த பின்னரே மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர், கடலோரங்களில் நீச்சல் பயிற்சி பெற்ற தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நெல்லை, பாபநாசம். தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம் ஆகிய பகுதிகளுக்கான பேருந்துகள் திருநெல்வேலி சாலையிலுள்ள வேட்டைவெளிமடம் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் எனவும், தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, சென்னை, சேலம் ஆகிய நகரகளுக்கான பேருந்துகள், தூத்துக்குடி சாலையில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் சாலையிலுள்ள தெப்பகுளம் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சாத்தான்குளம், திசையன்விளை, வள்ளியூர். நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு சேவை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், பக்தர்களின் வசதிக்காக 3 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து தலா 10 சிறப்பு பேருந்துகள் வீதம் 30 பேருந்துகள் திருச்செந்தூர் கோயில் வாசலுக்கு இயக்கப்படவுள்ளன. திருச்செந்தூர் குடமுழுக்கையொட்டி, நெல்லை வழியாக செங்கோட்டை செல்லும் சிறப்பு ரயில் இன்று இரவு 9:55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




