புதுச்சேரி பாஜக அமைச்சர் திடீர் ராஜினாமா..!
புதுச்சேரி பாஜகவில் இந்த மாதம் 30ஆம் தேதி புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதற்காக புதுச்சேரி யூனியன் பிரதேச பாஜகவில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்த பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன. 2021ஆம் ஆண்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், என்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று, முதலமைச்சராக என்.ரங்கசாமி பதவி வகித்துவருகிறார்.
அங்கு நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கும் வழக்கம் இருந்துவருவதால், என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், பாஜகவின் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணகுமார் ஆகிய இருவரும் அமைச்சரவையிலேயே இடம் பெற்றுள்ளனர். இதுபோக நியமன பாஜக எம்.எல்.ஏ.க்களும் இருந்துவருகின்றனர்.
இதில், இன்று திடீரென மூன்று எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.இந்தத் தகவல் வெளியானபோதே, அமைச்சர்கள் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணகுமார் ஆகிய இருவரில் ஒருவர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், ராஜினாமா செய்யும் அந்த நபருக்கு புதுச்சேரி பாஜக தலைவர் பதவி வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக வட்டாரங்களில் பேச்சு இருந்தது.
அதுபோலவே, தற்போது புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே இவரை புதுச்சேரி பாஜக தலைவராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




