பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமா? – அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பள்ளிகளில் முக கவசம் அணிவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், விளக்கமளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 302 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத் மற்றும் டெல்லியில் புதிதாக தலா 64 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்துக்கு அடுத்தபடியாக, உத்தரபிரதேசத்தில் 63 பேருக்கும், மேற்குவங்கத்தில் 60 பேருக்கும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.அதேநேரம் தமிழ்நாட்டில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிராவில் நான்குபேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 7 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தனர். அதேநேரம் ஒரே நாளில் 581பேர் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே, தமிழ்நாட்டில் நேற்று வரை 236 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாகக் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இணை நோய் இருப்பவர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தினார்.
மேலும், இணை நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அது கொரோனா மரணமாக கருதப்படாது எனவும் அமைச்சர் கூறினார்.இதற்கிடையே கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 2-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் பள்ளியில் முககவசம் அணிய வேண்டுமா.? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந் எழுந்துள்ளது.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லாத கொரோனா என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து தடுப்பு நடவடிக்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பள்ளிகளில் முக கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்” என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




