திருச்சி விமான நிலைய வளாகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் திடீர் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை அருகே இருந்த அம்பேத்கரின் சிலை சேதமடைந்ததால் அம்பேத்கரின் சிலை அமைப்பு குழு என்று ஒரு குழுவை உருவாக்கியது. அந்த குழுவின் மூலம் புதிய அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்ட நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கொட்டும் மழையில் நேற்று (மே 23) திறந்து வைத்தனர்.
அப்போது இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், அம்பேத்கர் சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இருக்கும்போது சொன்னார் திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல கொள்கை உறவு இருக்கிறது என்றார்.
இந்த இரண்டு இயக்கத்தினரும் சமூக நீதியையும் சமத்துவத்தையும் பேசக்கூடியவர்கள். அந்த புரிதலோடு தான் திமுக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் கைகளை நிமிர்த்தி களத்தில் நிற்கின்றோம். அவருடன் இணைந்து தொடர்ந்து பயணிப்போம் என்று தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது தனது விருப்பம் என்று நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இந்த எதிர்பாரா சந்திப்பு நிகழ்ந்தது அரசியல் வட்டாரஙகளில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.