டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் டெல்லி சென்றார்.
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்களை முதலமைச்சர் சந்தித்தது கவனம் பெற்றது.
இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ள கேள்விகள் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் போது அதில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களையும் மனுதாரர்களாக இணைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கு காங்கிரஸ் முழு ஆதரவு வழங்கும் என சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் உறுதி அளித்துள்ளனர்.காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தது குடும்பத்தினரை சந்தித்தது போல் இருந்ததாகவும், ஒவ்வொருமுறை சந்திப்பின் போது ஓர் அரவணைப்பு கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து டெல்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பஹல்காம் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்றும் தமிழகத்தை சேர்ந்த பரமேஸ்வரன் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதனிடையே, பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் தரப்பில் நேரம் கேட்டுக்கப்பட்ட நிலையில், நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பின் மாலை 4 முதல் 4.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.. இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





