இந்தியில் மட்டுமே பேசுவேன் என அடம்பிடித்த பெண் வங்கி மேலாளர் கன்னடத்தில் மன்னிப்பு..!
இது இந்தியா, கன்னடத்திலோ, ஆங்கிலத்திலோ பேசமாட்டேன், இந்தியில்தான் பேசுவேன் என்று அடம்பிடித்த பாரத ஸ்டேட் வங்கி பெண் மேலாளர் தற்போது கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கர்நாடகாவில் சமீபகாலமாக மாநில மொழி கன்னடத்திற்கும், இந்தி மொழிக்கும் இடையேயான பிரச்சனை அவ்வப்போது எழுந்துவருகிறது.
குறிப்பாக தேசியக் கல்வி கொள்கையில் மூன்றாவது மொழி தொடர்பான விவாதம் எழுந்ததில் இருந்து அம்மாநிலத்தில் மொழி குறித்தான பிரச்சனைகள் இன்னும் தீவிரமாக எழுந்துவருகிறது. இந்த வரிசையில் இணையத்தில் வெளியான ஒரு காணொளி மீண்டும் கர்நாடகா மாநிலத்தில் இந்தி – கன்னட மொழி பிரச்சனையை காட்டியது.
அந்த வீடியோவில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் கன்னடத்தில் பேசியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் இந்தியில் பதில் கொடுத்துள்ளார். அப்போது அந்த வாடிக்கையாளர் இது கர்நாடகா நீங்கள் எங்கள் மொழியில் தான் பேச வேண்டும் என சொல்ல, அந்த வங்கி மேலாளரோ, “நான் ஒருபோதும் கன்னடத்தில் பேச மாட்டேன். இந்தியில் தான் பேசுவேன்” என அவரிடம் கூறியிருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.இந்த வீடியோ வெளியான நிலையில், பெண் மேலாளரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தன. குறிப்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தனது எக்ஸ் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்ததுடன், உள்ளூர் மக்களை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், தனது செயலுக்கு கன்னட மொழியிலேயே பெண் மேலாளர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த சூழலில் புகாருக்கு ஆளான அந்த பெண் மேலாளரை பணியிட மாற்றம் செய்து பாரத ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




