கைகுலுக்கி இன்முகத்துடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரும் கைகுலுக்கி இன்முகத்துடன் கலந்துரையாடினர். தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்த செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அவர்களின் துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் ராஜகண்ணப்பன், அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு மாற்றி வழங்கப்பட்டது.
மேலும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ்-க்கு ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் அமைச்சர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மனோ தங்கராஜ் அமைச்சராக பதவியேற்ற பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் கைகுலுக்கி இன்முகத்துடன் பேசிக் கொண்டனர்.ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்கள், தமிழக அரசு தொடுத்த வழக்கால், உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் மூலம் சட்டமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, உதகையில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்காதது போன்ற நிகழ்வுகள் ஆர்.என்.ரவிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இத்தகைய சூழலில், ஆளுநரும், முதலமைச்சரும் பதவியேற்பு விழாவில் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மனோ தங்கராஜ். கடந்த 2016 ஆம் ஆண்டு அவருக்குச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முதல்முறையாக திமுக தலைமை வாய்ப்பு கொடுத்திருந்தது.
அந்த தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் ஏழு மாதங்களில் மீண்டும் மனோ தங்கராஜுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து வரும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை திமுக கூட்டணி முழுமையாகப் பெறுவதற்கு கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மனோதங்கராஜுக்கு அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




