--- --:--:-- --

பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித் கண்டனம்!

2.1

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் அஜித், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார். பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 4 தீவிரவாதிகள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

அதைத் தொடர்ந்து, ராணுவம், துணை ராணுவப் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியில் தேசிய விருது வென்ற பின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த நடிகர் அஜித் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

 

அஜித் தனது பேட்டியில், “இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். அரசாங்கம் தங்களால் முடிந்ததைச் செய்கிறத. நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அனுதாபம் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள் அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அமைதியான சமூகமாக வாழ வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.

 

இன்று, ஆயுதப் படைகளைச் சேர்ந்த பலரை நான் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்கு சல்யூட். நாம் நிம்மதியாக தூங்க அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் நமது எல்லையை பாதுகாக்க அயராது உழைக்கிறார்கள்.

 

குறைந்தபட்சம் அவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, நம் நாட்டிற்குள் நாம் ஒருவருக்கொருவர் மதிக்கவும், ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு சாதியையும் மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் நமக்குள் சண்டையிட வேண்டாம். அமைதியான சமூகமாக வாழ்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon